தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் வெண்கல சிலை, ஓமாந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டது. இன்று அதன் திறப்பு நடைபெற்ற நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சிலையை திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், திமுக எம்.பி.,கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், உதயநிதி உள்ளிட்டோர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சரியான நேரத்தில் அங்கு வந்த வெங்கையா நாயுடு, வரவேற்புக்கு பின், கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு முன் நின்று முதல்வர் ஸ்டாலினுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அப்போது துரை முருகன் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் மட்டும் ஸ்டாலினுடன் நின்று கொண்டிருந்தனர்.
எம்.பி., தயாநிதி மாறன், தூரத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை வெங்கையா நாயுடு அருகில் வருமாறு அழைத்தார். அதை சற்றும் எதிர்பாராத தயாநிதி மாறன், உடனே அவர் அருகில் மகிழ்ச்சியோடு வந்து நின்றார். அப்போது அங்கு கருணாநிதியின் மகள் கனிமொழியை காணவில்லை. அவரை தேடிய வெங்கையா நாயுடு, வலது புறமாக ஒதுங்கி நின்று கனிமொழியை , கையை காட்டி அருகில் வர அழைத்தார். கனிமொழியும் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே ஓடி வந்து வெங்கையாநாயுடு அருகில் நின்று கொண்டு, குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.
ஒதுங்கி நின்ற கனிமொழி மற்றும் தயாநிதி மாறனை வெங்கையாநாயுடு அழைத்து குரூப் போட்டோவில் பங்கேற்க செய்தது, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது.
இதோ அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ:
சிலை திறப்பும்.. பொன்மொழிகளும்!
சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அவரது சிலையின் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு :
- வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
- அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
- ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
- இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
- மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
இவை அனைத்தும் கருணாநிதியின் பொன்மொழிகள் ஆகும். இதையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.