இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து சென்னை வானகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் “விஜய் மாநாடு நடத்திய சில நாட்களிலேயே நான் வர முடியாது என்று புத்தக விழாவை ஏற்பாடு செய்த நிறுவனத்திடம் சொல்லிவிட்டேன். யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து என்னை மாற்ற முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபட சொல்லிவிட்டேன். இதை மீண்டும் மீண்டும் சொல்வது ஏற்க முடியாதது. 


இடைநீக்கம் செய்தால் மேற்கொண்டு அதை பெற்றி பேசக் கூடாது என்பது விதி. இந்த கட்சியில் மீண்டும் தொடர வேண்டும் என்றால் இதுபோன்று பேசக் கூடாது. அதையும் மீறி பேசுவதை பார்க்கும்போது ஆதவ் அர்ஜூனாவுக்கு ஏதோ செயல்திட்டம் இருக்கிறது என்று தெரிகிறது” எனத் தெரிவித்தார். 



தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பா என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த திருமாவளவன், “கண்டிப்பாக கிடையாது. அது ஒரு நடைமுறை. எடுத்ததும் ஒருவரை கட்சியில் இருந்து தூக்கிவிட முடியாது. என்ன என்று ஆராய்ந்து பார்த்துதான் நடவடிக்கை எடுக்க முடியும்.” எனத் தெரிவித்தார். 


முன்னதாக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதில் இருந்து விசிகவில் பெரும் புயலே கிளம்பியுள்ளது. மேலும் விசிக தலைவர் திருமாவளவனுக்கும் நெருக்கடி ஆரம்பித்து விட்டது. 


புத்தக வெளியீட்டு விழாவில் அரசியல் பேச வேண்டாம் அம்பேத்கரை பேசுங்கள் என திருமாவளவன் சொல்லி அனுப்பியும் ஆதவ் அர்ஜூனா அரசியல் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் திமுக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அதனாலேயே திருமா சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் பட்டார் எனவும் ஆதவ் அர்ஜூனா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.