தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கியது முதலே விஜய்க்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், அவர் விக்கிரவாண்டியில் நடத்திய அரசியல் மாநாட்டிற்கு பிறகு தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவாளர்கள் கடுமையாக  விமர்சிக்கத் தொடங்கினார்.

போஸ் வெங்கட்டின் கேள்வி:


நடிகரும், இயக்குனரும், தி.மு.க. ஆதரவாளருமான போஸ் வெங்கட் நடிகர் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு உன்கூட எல்லாமா அரசியல் பண்ணனுமா? என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு விஜய் ரசிகர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.


இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் தி.மு.க. ஆதரவாக நடிகர் போஸ் வெங்கட் பங்கேற்றிருந்தார். மறுமுனையில் விஜய்யின் தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி பேசியிருந்தார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய போஸ் வெங்கட் நடிகர் விஜய் ரசிகர்கள் தனது ட்வீட்டிற்கு கீழே வந்து விமர்சிப்பதாகவும், கெட்ட வார்த்தையில் விமர்சிப்பதாகவும், உங்கள் தலைவர் இப்படி பேசுவாரா? உங்கள் தலைவரை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? என்றும் கேள்வி எழுப்பினர்.


டிரம்ப் கூடவா அரசியல் பண்ணப்போறீங்க?


அப்போது, அவருக்கு பதில் அளிக்கம்  விதத்தில் பேசிய தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி, “ அண்ணன் போஸ் வெங்கட் சமூக வலைதளத்தில் நக்கலாக, யப்பா உங்ககூடயா நாங்க அரசியல் பண்ணனும்? எங்ககூட அரசியல் பண்ணாம அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடவா அரசியல் பண்ணப்போறீங்க?


எங்களோடதான் அரசியல் பண்ணியாக வேண்டும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தி.மு.க. என்ற கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சிதான் வீழ்த்தும். களத்தில் சந்திப்போம் என்று சொல்கிறோம். ஊழல் ஆட்சியை வீழ்த்துவதற்காக தளபதி வருகிறார்.


தமிழ்நாட்டில் என்ன பிரச்சினை இருக்கிறது? என்று கேட்கிறார்கள். குடும்ப ஆட்சி நடக்கிறது. அதை வீழ்த்த வேண்டும் இல்லையா? பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லை என்கிறார்கள். பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதால்தான் தளபதி அரசியலுக்கு வந்துள்ளார். பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருப்பதால்தான் தமிழ்நாட்டில் அவர் துறையில் அவர் நம்பர் 1-ஆக உள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டியில் இருக்க ஆட்கள் இருக்கிறார்கள். தேர்தலில் நிற்க ஆட்கள் இருக்கிறார்கள். பிரச்சாரம் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். பம்பரம் போல சுழன்று பணியாற்ற தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உள்ளனர்.”


இவ்வாறு அவர் பேசினார்.