அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்திருப்பது தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலை கிளப்பிள்ளது. குறிப்பாக, முதலமைச்சரின் ஒப்புதல் இன்றி அமைச்சர் ஒருவரை ஆளுநர் நீக்குவது அரிதிலும் அரிதான ஒன்று. சமீப காலத்தில், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக நினைவில் கூட இல்லை.


திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு:


இந்த நிலையில், ஆளுநரின் செயலுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆளுநரின் செயல், சரியான மனநலம் உள்ளவர் செய்யும் செயலாக தெரியவில்லை என விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்சித்துள்ளார்.


ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாகவும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


"ஆளுநர் மீண்டும் குட்டுப்படுவார்"


செந்தில் பாலாஜியை அமைச்சராக நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருவரை அமைச்சராக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் நீதிமன்றத்துக்கு சென்றால் ஆளுநர் மீண்டும் குட்டுப்படுவார் என காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.


அரசியல் சட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கு பின் தற்போதைய அறிவிப்பை ஆளுநர் திரும்பப்பெறும் நிலை ஏற்படும் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.


ஆளுநர் சர்வாதிகாரிபோல் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது செயல் மூலம் அவர் ஒரு சர்வாதிகாரி என ஆளுநர் காண்பித்திருப்பதாக விமர்சித்துள்ளார். 


நடந்தது என்ன?


அதிமுக ஆட்சி காலத்தில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை அவரை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. கைதை தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறிய நிலையில், அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், நீதிமன்ற ஒப்புதலுடன் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.


இந்த சூழலில், செந்தில் பாலாஜியை அமைச்சராக நீக்கி ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில், "செந்தில் பாலாஜி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும்” என விளக்கம் அளித்துள்ளார்.