தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்தார். அதில், “ தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்கள் எதுவும் மூடப்படவில்லை. இது உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாட்டில் 51,430 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. அது தற்போதுவரை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 


குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் எண்ணிக்கையை அதிகபடுத்துமாறு பணியாளர்களுக்கு வழியுறுத்தி வருகிறோம். அதிலும், குறிப்பாக 4 முதல் 5 குழந்தைகள் இருக்கும் மையங்கள் குறைந்தது 20 குழந்தைகள் இருக்குமாறு பணியாளர்களுக்கு வழியுறுத்தினோம்.


அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்கள் இருக்கிறது. உதாரணமாக, ஒரு மையத்தில் 15 குழந்தைகள், ஒரு பணியாளர்களும், மற்றொரு மையத்தில் 10 குழந்தைகள், ஒரு உதவியாளர்கள் இருப்பதால் இரு மையங்கள் இணைத்து ஒரே மையமாக செயல்பட சொல்லுகிறோம். இதுவே, தற்காலிக ஏற்பாடுதான். அப்போது, ஒரு மையத்தில் ஒரு உதவியாளர், ஒரு பணியாளர் இருக்கும்போது அங்கு படிக்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பெற்றோர்கள் நம்பிக்கையோடு கொண்டு வந்து தங்களது குழந்தைகளை விடுக்கிறார்கள். 


இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அதற்கான அரசாணையை பிறப்பிக்க உள்ளோம். இதற்கு பிறகு அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மையங்களில் காலி பணியிடங்கள் நிரப்பபட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். 


பணியாளர்கள் இடமாற்றுமும் தற்காலிகமானதுதான். குறிப்பிட்ட இடங்களில் எங்கு இதற்கான வசதிகள் இருக்கிறதோ அங்கு மட்டுமே இதை செயல்படுத்துகிறோம். அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவது என்பது பொய்யான தகவல். நாங்கள் பணியாளர்களிடம் சொல்வது குழந்தைகளின் வருகையை அதிகப்படுத்துங்கள். ஒவ்வொரு வீட்டுக்கு சென்று அழைத்து வாருங்கள் என்று சொல்லுகிறோம்.” என்றார்.


கேள்வி: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம்தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்கள் இதுகுறித்து உங்கள் கருத்து..? 


தொடர்ந்து இதற்கும் பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், “ ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. எண்ணிக்கையை அதிகரிக்க சொல்லுகிறோம். முறையாக பாடங்களை எடுங்கள் என்று சொல்லுகிறோம். புகார் குறித்த அனைத்து நடவடிக்கையும் எடுத்துகொண்டு இருக்கிறோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 20 பேருக்கு பதவி உயர்வு அளித்து இருக்கிறோம். மேலும், 400 பேருக்கு உதவி உயர்வு அளிக்க தயாராக இருக்கிறோம். அனைத்துவிதமான வசதிகளுக்கு செய்து கொடுக்கிறோம். ஏன் இந்த அறிவிப்பு வந்தது என்று தெரியவில்லை, இது எனக்கு வருத்தத்தைதான் தருகிறது. 


அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று சொல்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ” என தெரிவித்தார்.