ஃபாசிச எதிர்ப்பாளர்களை தவெக தலைவர் விஜய் நையாண்டி செய்திருப்பதாக விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் திருமாவளவன் வெளியிட்ட பதிவில், "நடிகர் விஜய்யின் மாநாட்டு உரை குறித்து சற்று முன் ஊடகவியலாளர் எழுப்பிய வினாக்களுக்கு விடையிறுத்தேன். ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான்.
விஜய் மீது திருமாவளவன் விமர்சனம்:
அவரோ "அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா " என்று ஃபாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா?
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதை முன்னிறுத்துவதாலும்; "பிளவுவாதத்தை எதிர்ப்போம்" என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் என்ன பேசினார்?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவின் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார்.
"எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?
திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை உயிரிழந்த போதும் நான் பெற்றேன்" என அவர் பேசியிருந்தார்.