கொரோனா முதல் அலை காலக்கட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மற்றும் இந்தியாவில் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கும் நாய் பூனைகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகப் புகார்கள் வரத்தொடங்கின. விலங்குகளில் கோவிட்-19 கொரோனா தாக்கம் குறித்து எழுந்த முதற்கட்டப் புகார்கள் இவை. இருந்தாலும் பின்னர் விலங்குகளில் கொரோனா பரவாது என உறுதியாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே 2021ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் மெல்லத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை கிடுகிடுவென மக்களிடையே பரவியது.  கொரோனா வைரஸின் இந்திய இனவகை மற்றும் பிரிட்டன், தென் ஆப்ரிக்க இனவகை என கொரோனா கலவையாக இந்திய மக்களைத் தாக்கியது.




தற்போது தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தொடர் ஊரடங்கின் அடிப்படையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் அதற்கு அடுத்தகட்ட அதிர்ச்சியாக மேலும் ஒரு தகவல் வந்து சேர்ந்தது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்களுக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றும் பாதிக்கப்பட்ட சிங்கத்தில் ஒன்று இறந்ததாகவும் தகவல் கிடைத்தது.  கொரோனா முதல் அலை காலம் தொடங்கியே பூங்காவிற்கான பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் உள்ள விலங்குகளின் உடல்நிலையும் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்படியிருக்க சிங்கங்களுக்கு எப்படிக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது? வைரஸ் எப்படித் தொற்றியது எனக் கேள்வி எழுந்தது.




வண்டலூர் பூங்காவின் துணை இயக்குநர் நாகசதீஷ் கிடிஜலா ஐ.எஃப்.எஸ். இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்தார். அவர் கூறியதிலிருந்து,’சிங்கங்களுக்கு இரண்டு வழியாக மட்டுமே கொரோனா பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று, பூங்காவைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்பவர்களிடமிருந்து தொற்றியிருக்க வேண்டும். இரண்டு, விலங்குகளுக்குத் தரப்படும் மாட்டுக்கறியிலிருந்து பரவியிருக்க வேண்டும். ஆனால் பூங்காவைச் சுத்தம் செய்பவர்களுக்குத் தொடக்கத்திலேயே தடுப்பூசி போடப்பட்டுவிட்டது, தொடர்ச்சியாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பெரம்பூரின் இறைச்சியகங்களில் இருந்துதான் ஒட்டுமொத்தமாக வண்டலூர் விலங்குகளுக்கு உணவு எடுத்து வரப்படுகிறது. பல கைகள் மாறி வருகிறது என்பதால் கறிகள் எப்போதுமே புறஊதாக்கதிர்கள் கொண்டு சுத்தம்செய்யப்பட்டுதான் விலங்களுக்குத் தரப்படும். மேலும் இறைச்சி வெட்டுபவர்கள் உட்பட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.இந்த இரண்டு வழிகளைத்தவிர சிங்கங்களுக்கு வேறு எப்படியும் கொரோனா பரவ வாய்ப்பில்லை.நாங்கள் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.சிங்கங்கள் சரியாக உணவு உட்கொள்வதில்லை என்கிற புகார் வந்தவுடன் முன்னெச்சரிக்கையாக 15 சிங்கங்களின் சாம்பிள்களை கடந்த மே 26ந் தேதி  பரிசோதனை செய்தோம். அறிகுறிகள் தென்பட்ட சிங்கங்களுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.அவை நல்லமுறையில் உடல்நிலை தேறிவருகின்றன. இறந்த சிங்கம் அது சாகும் தருவாய் வரை எவ்வித கொரோனா அறிகுறியும் காண்பிக்கவில்லை. தற்போது மேலும் 7 சாம்பிள்கள் ஹைதராபாத் சிசிஎம்பி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 4 புலிகளின் சாம்பிள்களும் அடக்கம். இன்று சிறுத்தையின் சாம்பிள்களையும் பரிசோதனைக்காக  எடுக்கவுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.




வண்டலூர் புலிகளிலும் கொரோனா பாதிப்புக்கு வாய்ப்பிருக்கிறதா எனக் கேட்டதற்கு, ‘நிச்சயம் வாய்ப்பிருக்கிறது!’ என்றார். இதுநாள்வரை மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் மட்டுமே கொரோனா பரவி வந்த நிலையில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read:விலங்கு கொரோனா: மனிதனுக்கு பரவினால் என்ன ஆகும்? உலக ஆய்வுகள் சொல்வதென்ன!