வடிவேல் ஒரு படத்தில் கிணறு வெட்டுவதற்கு லோன் வாங்கிக் கொண்டு கிணறை வெட்டாமல் இருப்பார். அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து வெட்டாத கிணறுக்கு வெட்டியதைப்போல ரசீதைப் பெற்றுக்கொண்டு அதன் மூலம் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார். அப்போது காவல் அதிகாரியாக இருக்கும் நெல்லை சிவா கிணற்றை காணவில்லை என்று வழக்கா, " இந்த வேலையே தேவையில்லை " என்று ராஜினாமா செய்துவிட்ட சென்றுவிடுவார் . இந்த மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு காமெடி.

 



காமெடியில் வருவதைப் போலவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளது. கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூர் பஞ்சாயத்தில் அக்கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு சார்பில் தரை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கிணறு தற்போது இடிந்து குட்டை போல் காட்சியளிக்கிறது.

 

பெருமாட்டுநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம ஏரிக்கரையில் இந்த கிணறு வெட்டப்பட்டது. தரை கிணற்றில் இருந்து மோட்டார்கள் மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு கிராமம் முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது . இந்த தரைதள கிணறு அமைப்பதற்கு ரூ.9,50,000 ஒதுக்கப்பட்டது.   இந்த நிதியின் மூலம் கடந்த 2015 - 2016 ஆம் ஆண்டு இந்தக் கிணறு கட்டி முடிக்கப்பட்டு கிராமத்தின் குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  அந்த கிராமத்தில் குடியிருக்கும் 350 குடும்பங்களுக்கு இந்த கிணறு பயனுள்ளதாக இருந்து வந்தது.

 



இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென்று அந்தக் கிணறு சரிந்து விழுந்துள்ளது.  கான்கிரீட்டால் போடப்பட்டிருந்த மூடியும் உடைந்து அந்த கிணற்றுக்குள் விழுந்தது. இதன் காரணமாக குடிநீருக்காக பயன்படுத்தும் கிணறு இப்பொழுது குட்டை போல் கலங்கிய நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் கிணற்று நீரை பயன்படுத்த முடியாததால் பொதுமக்களுக்கு சிரமம் ஏறபட்டுள்ளது.

 

இதுகுறித்து பேசிய அப்பகுதிவாசி சுரேஷ் , ’’கிட்டதட்ட பத்து லட்ச ரூபாய் செலவு செய்து இந்த கிணறு அமைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கிணறு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த கிணறு வெட்டிய சமயத்தில் குடிநீருக்காக நாங்கள் நீண்ட தொலைவு சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலையில் இருந்தோம். இந்த கிணறு மூலம் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்து வந்தது. தரமற்ற முறையில் இந்தக் கிணறு அமைக்கப்பட்டதால்  5 ஆண்டுகளில் தற்போது இது சரிந்து விழுந்துள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் எங்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படும்’’ என்றார்.

 



தரமான முறையில் கட்டப்படும் கிணறுகள் பல தலைமுறைகளை தாண்டி பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில் இதுபோன்ற தரமற்ற முறையில் கட்டப்படும் கிணறுகள் வடிவேல் பாணியில் காணாமல் போய்விடுகின்றன .