மிக்ஜாம் புயலால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி  உருவான மிக்ஜாம் புயலானது தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. கிட்டதட்ட 24 மணி நேரம் இடைவிடாது சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது. இந்த புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடந்தது. 


புயல் கடந்து 2 நாட்களாகி விட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது முழுவதுமாக குறையவில்லை. தொடர்ந்து 5வது நாளாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில தாலுகாக்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களை இணைக்கும் புறநகர் பகுதிகளில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இப்படியான நிலையில்  வெள்ள பாதிப்பு காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்த சில நாட்களாக செயல்படவில்லை. 


z






 மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால் உயிரியல் பூங்கா முழுவதும் நீர் தேங்கியது. மேலும் பூங்காவில் 30 மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் புயல், மழை முடிந்தும் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 2 தினங்கள் வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு இன்று முதல் வண்டலூர் பூங்கா மீண்டும் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க: Earthquake: மிக்ஜாமை தொடர்ந்து செங்கல்பட்டை பதற வைத்த நில அதிர்வு - ஆம்பூரிலும் உணரப்பட்டதாக தகவல்