மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், அங்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வங்கக்கடலில் உருவாகி ஆந்திர மாநிலம் அருகே கரையை கடந்த மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் தனது தாக்குதலை தொடுத்துச் சென்றது. இதில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் செங்கல்பட்டும் ஒன்று. அங்கு இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பாத நிலையில் சில தாலுக்காக்களில் மட்டும் வெள்ள நீர் வடியாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் அங்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 






நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள பதிவில், ‘செங்கல்பட்டில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடியில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் 3.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.


ஆனால் செங்கல்பட்டு பகுதியில் நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேசமயம் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நில அதிர்வை உணரவில்லை என தெரிவித்துள்ளனர்.