மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும் சினிமா பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் படம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். 


இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரை தயாநிதிக்கு மூளை வாத பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. 


ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையும் இன்னும் வெளிவரவில்லை. அவ்வாறு வெளிவந்தால் மட்டுமே அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து தெரியவரும். இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி இடையே பெரிய அளவில் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் துரை தயாநிதி குடும்பத்தினர் அனைவருடனும் சுமூகமான உறவை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.