Vande Bharat Train: திருநெல்வேலிக்கு கூடுதலாக வியாழக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.


நெல்லை வந்தே பாரத் ரயில்


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டை பொருத்தவரை, சென்னை - கோவை, சென்னை -  நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என மொத்த மூன்று ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  8 மணி நேரத்தில் சென்னையில்  இருந்து நெல்லைக்கு சென்றடையும். காலை 6 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடையும். இன்னொரு பக்கம், சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக சென்று திருநெல்வேலி அடையும். இதற்கு டிக்கெட் விலையானது ரூ.1620 வசூலிக்கப்பட்டு வருகிறது.


வாராந்திர சிறப்பு வந்தே பாரத் ரயில்


இந்நிலையில், தற்போது கூடுதலாக வாராந்திர 7 சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய வியாழன் கிழமைகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் வண்டி எண் 06067 சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 6.00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். மறு மார்க்கத்தில், அதே நாட்களில் நெல்லை - சென்னை வந்தே வாரத்  ரயில் வண்டி எண் 06068 மாலை 3.00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


இந்த சிறப்பு ரயில் வழக்கம்போல தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளும் வர உள்ளதால் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கூடுதல் ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




மேலும் படிக்க


வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவமழை...தயார் நிலையில் தமிழ்நாடு...4,970 நிவாரண முகாம்கள் ரெடி!