"43 சதவீதம் மழை குறைவு”


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான  மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், "தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் 17 விழுக்காடு அளவிற்கு மழை பெய்துள்ளது.  இது வழக்கத்தை விட 43 சதவீதம் அளவு குறைவாக உள்ளது. சென்னையை பொருத்தவரைக்கும் வடகிழக்கு பருவமழை 40 விழுக்காடு அளவு குறைந்து இருக்கிறது. தற்போது வரை சென்னையில் 19 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி உள்ளது" என்று தெரிவித்தார்.


"4,967  நிவாரண முகாம்கள்”


தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4,967  முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில்  169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 400 மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.  கடலோர மாவட்டங்களில் உள்ள 121 நிரந்தர உதவி  பல்நோக்கு மையம்  தயார் நிலையில் உள்ளன.  27 மாவட்டங்களில் அவசர கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 4000 கன அடி நீர் திறந்து விடப்படுவதால்  கரையோர வசிக்கும் 80,000 மக்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மழையால் இதுவரை பெரிதாக பாதிப்பில்லை.


பூண்டி நீர்த்தேக்கத்தில்  65 சதவீதமும் செம்பரம்பாக்கம் நீர் தேக்கத்தில் 85 சதவீதமும்  செங்குன்றத்தில் 80 சதவீதம்  நீர் இருப்பு உள்ளது.  பேச்சுப்பாறை, சாத்தனூர், கிருஷ்ணகிரி  ஆகிய இடங்களில் உள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மழை நீரை வெளியேற்றுவதற்கு பெரிய பம்பு மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில், 27 சுரங்கப்பாதைகள்  கண்காணிப்பில் உள்ளதாகவும்  100% மழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது” ” என்றார் அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.


புகார் எண் அறிவிப்பு:


மேலும், "தற்போது பெய்துள்ள மழையினால்  கால்நடைகள் எதுவும் பாதிப்படையவில்லை. தமிழ்நாட்டில் நான்கு குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளன.  தூத்துக்குடியில் 2, திருநெல்வேலி மற்றும்  நாகப்பட்டினத்தில் தலா ஒன்று என நான்கு குடிசை வீடுகள் நேற்று பெய்த மழையில்  சேதமடைந்து உள்ளன.  அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து இந்த மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் அரசு தரப்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.


மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு 1070,1077 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.  மேலும் வாட்ஸ் அப் வாயிலாக 9445869848  என்ற எண் மூலம் புகார் அளிக்கலாம். கனமழையால் ஏற்படும் எந்த விதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.