கடந்த ஒரு வருட காலமாக அதிமுக, தமிழ்நாடு பாஜகவுக்கிடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. 


அண்ணாமலை:


சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.


வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரண்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


முடிவுக்கு வந்த அதிமுக பாஜக கூட்டணி:


அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி வரை சென்று, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அண்ணாமலை குறித்து புகார் அளித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பாஜக தேசிய தலைமை உடன்படவில்லை என தகவல் வெளியானது.


இச்சூழலில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் பாஜகவுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.


வடமாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென்மாநிலங்களில் கிடைக்கும் வெற்றியின் மூலம் சரிகாட்ட நினைக்கும் பாஜக தேசிய தலைவர்களுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது.


"பாஜகவுக்கு பெரும் இழப்பாக இருக்கும்"


இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து பிகார் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தேஜஸ்வி, இது பாஜகவுக்கு மிக பெரிய இழப்பு என கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் திமுக பலமாக உள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்பட்டது ஆனால் அது பலன் அளிக்கவில்லை. 


அர்த்தமற்றது:


திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை. தென்னிந்தியாவைப் பார்த்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த அதிமுக விலகியிருப்பதைக் காணலாம். இது பாஜகவுக்கு பெரும் இழப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். கூட்டணியில் இருந்து சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே வெளியேறிவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது அர்த்தமற்றது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. ஒரே ஒரு சர்வாதிகாரி உட்கார்ந்து இரண்டு பேர் நாட்டை நடத்துகிறார்கள்" என்றார்.