சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 4:55 மணிக்கு, மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை, இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள், டிக்கெட் மற்றும் அவர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்து, விமானத்தில் ஏற அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது பாவா மொய்தீன் என்ற பெயரில், ஆன்லைனில் டிக்கெட் எடுத்து, ஆன்லைன் மூலமாக வெப் செக் செய்து, போர்டிங் வாங்கிய ஒருவர், இந்த விமானத்தில் மதுரை செல்ல வந்தார். இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள், அந்தப் பயணியின் ஆன்லைன் விமான டிக்கெட் மற்றும், அவருடைய ஆதார் கார்டு ஆகியவற்றை, வாங்கி பார்த்தனர். ஆதார் கார்டில் சர்மேஷ் கான் என்ற பெயர் இருந்தது. ஆனால் விமான டிக்கெடில், பாவா மொய்தீன் என்ற பெயர் இருந்தது.  விமான டிக்கெட்டில் ஒரு பெயரும் ஆதார் கார்டில் ஒரு பெயரும் இருந்ததால், அந்தப் பயணியை விமானத்தில் பயணிக்க, இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

 

இதை அடுத்து பயணியிடம் இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பயணி நான் விமான நிலையத்திற்குள் நுழையும் போது, கேட்டில்  நின்ற, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், என்னுடைய விமான ஆன்லைன் விமான டிக்கெட் மற்றும் ஆதார் கார்டை வாங்கிப் பார்த்து பரிசோதித்து விட்டு தான், என்னை உள்ளே அனுப்பினர். அப்படி இருக்கையில், நீங்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுப்பது ஏன்? என்று கேட்டார். அவர்கள் தவறுதலாக அனுப்பி விட்டார்கள் என்பதற்காக, நாங்களும் அதைப்போன்ற தவறை செய்ய முடியாது. விமான டிக்கெட் ஆதார் கார்டு இரண்டிலும் ஒரே பெயர் இருந்தால்தான் பயணம் செய்ய அனுமதிக்க முடியும் என்று உறுதியாக கூறிவிட்டனர். இதை அடுத்து பயணி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனாலும் பயணியை விமானத்தில் பயணம் செய்ய இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

 

இதை அடுத்து பயணி, விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். விமான நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி விசாரித்த போது, விமான நிலைய நுழைவு வாசல் கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான டிக்கெட் மற்றும் ஆதார் கார்டு இரண்டிலும் வேறு வேறு பெயர்கள் இருந்ததை கவனிக்காமல், தவறுதலாக உள்ளே அனுப்பிவிட்டது தெரியவந்தது. மேலும் இது  தவறு என்பதை அறிந்து, விமான நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை விமான நிலையத்தில் இதை போல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கவனக்குறைவாக செயல்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த ஒரு இளைஞரை, விமான டிக்கெட் உள்ளிட்ட எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் அனுப்பி விட்டனர். அந்த இளைஞர் சர்வதேச விமான நிலையத்துக்கு சுத்தி அலைந்து, குடியுரிமை அலுவலகத்தில், ஒரு ஊழியரின் செல்போனை திருட முயன்ற போது, விமான நிலைய அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இலங்கை இளைஞர், எந்தவித ஆவணமும் இல்லாமல், விமான நிலைய பயணிகள் வரும் கேட் வழியாக உள்ளே வந்திருப்பது  தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றியும், விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை  உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து, விசாரணை நடந்தது. இதைப்போல் கடந்த காலங்களில் மேலும் சில சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.