கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு நிலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்காக, அம்மா இருசக்கர வாகனத் திட்டம் துவங்கப்பட்டது. வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான முறையான வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு வாகனத் தொகையில் 50% ரூபாயோ அல்லது ரூ 25000 வழங்கப்படும். இவற்றில் எது குறைந்த தொகையோ அது மானியமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ”அம்மா இருசக்கர வாகன திட்டம் தொடர்வது குறித்து நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை. இத்திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், “மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் பற்றி உறுப்பினர் குறிப்பிட்டார். தற்போது நாங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்ல, அனைத்து பெண்களும் பயன்பெறுகிறார்கள். தற்போது மகளிருக்கான இருசக்கர வாகன திட்டத்தின் மீது பெண்களிடம் அதிக ஆர்வம் இல்லை” எனத் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பிற்கு பின்னர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த அதிமுக ஆட்சியில் உழைக்கும் மகளிருக்காக மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இது மகளிருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் யாரையும் சாராமல் சுயமாக முடிவு எடுப்பது, அவர்களின் பணியை அவர்களே செய்வது என்பதில் முக்கிய அடிப்படையாக இருப்பது சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொள்வது. அத்தகைய வாகனங்களுக்கு மானியத்தை நிறுத்துவது என்பது சரியானதல்ல. பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் இறக்கைகளாக மாறியுள்ளது. எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு மீண்டும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்", என்றார்.