கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்கக் கோரி சாட்சியாக சேர்க்கப்பட்ட ரவி என்பவர் தொடர்ந்த  வழக்கின் தீர்ப்பை வரும் 27-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


இந்த வழக்கின் விசாரணையில், மேல் விசாரணை நடத்த உள்ளதால் தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் தரும் படி பல தரப்பில் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், மீண்டும் விசாரிப்பதாக மனுதாக்கல் செய்து அனுமதி பெறாமலேயே விசாரணை தொடங்கியுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டார். மேலும், கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்தவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது வழக்கு முழுவையாக விசாரிக்கப்பட்டு வருவதால் 8 வாரம் அவகாசம் தேவை எனவும், காவல்துறை மனு நிராகரிக்கப்படவில்லை எனவும் அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. எஸ்டேட் உரிமையாளர், நிர்வாகிகளிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை எனவும் காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.  இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 27-ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.