திராவிடர் கழக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணியினர் நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து பரப்புரை மேற்கொண்டனர். இந்த பரப்புரை பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.


திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திமுக துணை பொதுசெயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்ட குழு வினருக்கு வாழ்த்தி சான்றிதழ் வழங்கினர்.


இதைதொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில். பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, "வடமாநிலத்தில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை பேசுகின்றனர். ஆனால் தமிழ்நாடு நீட் தேர்வே முறைகேடு என்று சொல்லி போராடி வருகிறோம்" என்று பேசினார்.


"நீட் எதிர்ப்பு குரல் மற்றும் சாதி வாரிய கணக்கெடுப்பு ஆகியவற்றை நாம் பேசினால், அதனை மாற்றிட மத்திய அரசு தற்போது மிசா சட்டம் கொண்டு வந்த நாளை கருப்பு தினமாக அறிவித்து உள்ளது.


அவர்கள் மிசா எதிர்ப்பு தினம் கூறி வருவதற்கு எதிர்ப்பாக பிரதமர் மோடி பதவி ஏற்ற நாள் இந்தியாவின் துக்கநாளாக அனுசரிப்போம்" என்றார். மேலும் அவர் பேசுகையில் "மிசா சட்டம் என்பது அரசியல் ரீதியான நடவடிக்கை என்றும் ஆனால் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு எதிரானது" என்றார்.



திராவிடர் கழகம் துவங்கி வைத்த எந்த போராட்டமும் தோல்வி கண்டதில்லை. அதே போன்று தான் இந்த போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்றும், திராவிடர் நாகரீகமாக செயல்பட்டு கொண்டு வந்து உள்ளோம், ஆனால் அவர்கள் அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர் என்று பேசினார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் நீட் மட்டுமல்லாமல் மதத்தையும் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை ஒரு போதும் வெற்றி பெறாது" என்று பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, "மத்திய அரசு நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நெருக்கடி காலத்தை பேசுவது என்பது பாஜக அரசின் தலைமையில் நடைபெறும் மத்திய அரசின் காலம்தான் உண்மையான நெருக்கடி காலம் என்று சுட்டிக்காட்டிய அவர், நீட் தேர்வு என்பதே, கூட்டாச்சி தத்துவத்தை ஒழிப்பது, மாநில உரிமைகளை பறிப்பது தான் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான அடிப்படை தான் என்றும் இதனை எதிர்க்க வேண்டும் என்றார்.


நீட் தேர்வின் அடிப்படையே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கலைக்க வேண்டும் என்பதுதான். ஒரே தேர்தல் எப்படி ஏற்றுகொள்ள முடியாதோ; அதே போன்று தான் ஒரே தேர்வு என்பதையும் ஏற்று கொள்ள முடியாது. அரசியல் சட்ட விரோதம். கூட்டாச்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்க கூடிய செயல்" என்றும் குற்றம்சாட்டினார்.



"நீட் தேர்வில் மதிப்பெண்கள் கொண்டே மருத்துவ படிப்பு என்றால் மேல்நிலை பள்ளி எதற்கு என்று கேள்வி எழுப்பிய அவர் மீண்டும் மனு தர்மத்தை கொண்டு வருவதற்கான முயற்சி தான் என்றும் இந்த சூழ்ச்சி புயல் என்றும், நாடாளுமன்றத்தில் ராமரை கைவிட்டனர் பாஜகவினர், ஏன் என்றால் அயோத்தி கைவிட்டுவிட்டது என்பதால் தான் என்று பேசிய அவர், எந்த ஒரு மக்கள் விரோத செயலையும் போராடி தான் வெற்றி பெற்று உள்ளது என்பது வரலாறு என்றும், இந்த போராட்டமும் வெற்றி பெறும் என்று உறுதிபட தெரிவித்த அவர், நீட் தேர்வு எந்த ரூபத்தில் வந்தாலும் நிச்சயம் ஒழித்தே தீருவோம் என்று உறுதியாக தெரிவித்தார்.


இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி என்றும் மற்ற கூட்டணி பதவி கூட்டணி என்றும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இருப்பதே இதற்கு சாட்சி என்று கூறினார். தற்போது நடப்பது பாஜக அரசு அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றும் கூட்டணி நாற்காலியில் தான் ஆட்சி நடந்து கொண்டு உள்ளது. ஜனநாயகம் ஒழிக்க வேண்டும் என்பது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்த அவர், மாநில உரிமைகள் காப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடும் அனைவருக்கும் ஓய்வு கிடையாது தொடர்ந்து போராட்ட வேண்டும் என்றும் அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்" என்றும் அறிவித்தார்.