இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்த நியமனத்தில் வாரிசு அரசியல் ஏதுமில்லை. பொது வாழ்வுக்கான அத்தனை அம்சமும் துரை வைகோவுக்கு உள்ளது. துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவுக்கு ஆதரவாக கிடைத்தது. எனக்கு இன்னமும் வயதாகவில்லை. நான் இளமையாகவே இருக்கிறேன். இப்போது கூட நான் வாலிபால் விளையாடுவேன் என்றார்.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலின் போது பேசிய வைகோ, திமுக வெற்றி பெறும் என்றும், என் மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. என் 56 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டிருக்கிறேன். 28 ஆண்டு காலம் லட்சக்கணக்கான கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், 5.5 ஆண்டுகாலம் ஜெயில் வாழ்க்கை என அரசியலில் என் வாழ்க்கையை அழித்திருக்கிறேன். அரசியல் என்னோடு போகட்டும். என் மகன் வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.
எனவே அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அவர் அரசியலுக்கு வருவதை 20 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கட்சிக் குழு கூட்டம் முடிவு செய்யும் எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று துரை வைகோவுக்கு, மதிமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது
முன்னதாக நெல்லையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள்கூட்டத்தில் பேசிய வைகோ, இவ்வளவு நாள் கட்சியை ரத்தமும் சதையுமாக கட்டி காப்பாற்றி வந்தேன். இனி கட்சியை வலுப்படுத்த அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று உருக்கமாக பேசி, மதிமுகவிற்கு கிடைத்த தொண்டர்கள் போன்று மாணிக்க கட்டிகள் எந்த இயக்கத்திற்கும் கிடைத்தது இல்லை என்று அந்த கூட்டத்திலேயே கலங்கினார் வைகோ.
அப்போதிலிருந்தே இரண்டு செய்திகள் கச்சை கட்டி பறக்கத் தொடங்கின. ஒன்று மதிமுக-வை மீண்டும் வைகோ திமுகவோடு இணைக்கப் போகிறார் என்பது, இன்னொன்று, மதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து தான் விலகிக்கொண்டு, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அந்த பொறுப்பை தனது மகனான துரை.வையாபுரிக்கு கொடுக்க போகிறார் என்பதும்தான். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துரை. வையாபுரியோ இதுவரை எனது தந்தைக்கு ஒரு நல்ல மகனாக இருந்தேன், இனி கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாகதான் இருப்பேன் என்று சொன்னதோடு, பதவியோ, பொறுப்போ வேண்டும் என்று தனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, அதன் மீது தனக்கு இஷ்டமும் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.