வைகை ரயில் தாமதம்:


அண்மையில், கடந்த 24ஆம் தேதி நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர்  மோடி தொடங்கி வைத்தார். அதில், நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையும் அடங்கும். இந்த சென்னை - மதுரை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயிலால் தற்போது வைகை, பொதிகை உள்ளிட்ட ரயிலுக்கு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.


பொதுவாக வைகை எக்ஸ்பிரஸ் காலை 7.10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 7:15 மணி நேரம் பயணித்து பிற்பகல் 2.25 மணிக்கு சென்னை வந்தடையும். அதேபோல, பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு வைகை, 7.25 மணி நேரம் பயணித்து மதுரைக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடைகிறது. இந்நிலையில்தான், வந்தே பாரத் ரயில் காரணமாக வைகை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றி பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரித்துள்ளது தெற்கு ரயில்வே. இந்த நேர மாற்றம் இன்று (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் நேரம் மாற்றம்:



  • மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ்(12636) மதுரையில் இருந்து காலை 7.19 மணிக்கு பதிலாக காலை 6.40 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். 

  • மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ்(12635) மதுரைக்கு இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு வந்தடைகிறது. 15 நிமிடம் தாமதமாக மதுரை வந்தடைகிறது.

  • செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்(12662) மதுரையில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.45 மணிக்கு 10 நிமிடம்  முன்னதாக புறப்படுகிறது.

  • மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்(12661) மதுரையில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 4.30 மணிக்கு 15 நிமிடம் முன்னதாக புறப்படுகிறது.

  • மதுரை-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்(16722) மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.00 மணிக்கு 25 நிமிடங்கள் முன்னதாக புறப்படுகிறது. 



  • மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் எக்ஸ்பிரஸ்(12638) மதுரையில் இருந்து 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு 15 நிமிடங்கள் முன்னதாக புறப்படுகிறது.

  • மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் (16868) மதுரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு பதிலாக அதிகாலை 3.35 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படுகிறது.  


வந்தே பாரத் ரயிலால் சிக்கல்:


46 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையும் சென்னையும் இணைக்கும் ரயிலாக  வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலில் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு பயணித்து வருகின்றனர். வரலாற்று சிறப்பு  மிக்க இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி உயர் வகுப்பு தொடங்கி, முன்பதிவற்ற பெட்டிகள் வரை ஏழை முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மதுரை டூ சென்னை இடையே பயணித்து வந்த நிலையில், தற்போது அதன் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நேர அட்டவணை இன்று முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 வருடம் பாரம்பரியமிக்க வைகை ரயிலின் பயண நேரத்தை 7 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 7.30 மணி நேரமாக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது. இந்த நேரம் மாற்றம் பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.