சென்னை அம்பத்தூரில் மின் கசிவால் ஏசி தீப்பிடித்து எரிந்து புகையினால் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


அம்பத்தூர் மேனாம்பேடு ஏகாம்பரம் நகரை சேர்ந்த ஹகிலா வ/50, இவர் கணவரை இழந்தவர். இவருடைய மகள் நஸ்ரின் வ/16 , இவர் மேனாம்பேடு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்கள் இருவரும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். வழக்கம் போல் தூங்கும் போது ஏசியை பயன்படுத்தியுள்ளனர். அப்போது ஏசி தீப்பற்றி வயர்கள் எரிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கரும் புகையில் சிக்கி மூச்சு திணறலில் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்து அக்கம் பக்கத்தார் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கும்போது ஏசியில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து அதில் வந்த புகை மூட்டத்தால் மூச்சு திணறி சுய நினைவின்றி இருவரும் சிறிய தீ காயத்துடன் இறந்து கிடந்துள்ளனர். மேற்கண்ட இருவரையும் அம்பத்தூர் மகாலட்சுமி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


 இருவரும் இறந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இறந்த இருவரின் உடல்களையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது