Coonoor Bus Accident: தென்காசியில் இருந்து ஊட்டிக்கு 59 பேர் கொண்ட தனியார் சுற்றுலா பேருந்து சென்றது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது 50 அடி பள்ளத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்தது. இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மீட்புத்துறையினரும், காவல்துறையினரும் விரைந்தனர்.


நிதின், பேபிகலா, முருகேசன், முப்பிடத்தி, கெளசல்யா  உட்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  விபத்து நடைபெற்ற செப்டம்பர் 30ஆம் தேதி பலி எண்ணிக்கை 8ஆக இருந்த நிலையில், சிகிச்சை பெற்றுவந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. அடையாளம் காண முடியாதவர்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்திலும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து சமூக ஆர்வலர்களும் மீட்புப் பணியில்  டார்ச்-லைட் வெளிச்சத்தில் ஈடுபட்டனர். 


மீட்கப்பட்டவர்களில் 40 பேர் காயங்களுடன் குன்னூர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் இல்லாமல் மீட்கப்பட்ட 10 பேர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்து நடைபெற்றதையடுத்து மாவட்ட எஸ்.பி தலைமையில் மீட்புப்பணிகள் நடைபெற்றது.


தென்காசி மாவட்டம் கடையம் மேல்கல்யாணிபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் தலைமையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டிக்குச் சென்று திரும்பும் போது குன்னூர் அருகே மரப்பாலம் கெபி அருகே பேருந்து சென்று கொண்டு இருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்தில் 57 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் என மொத்தம் 59 பேர் 


விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூபாய் இரண்டு லட்சம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தென்காசி மாவட்டத்திலிருந்து உதகமண்டலத்திற்கு தனியார் பேருந்து மூலம் சுற்றுலாவிற்கு சென்றவர்கள் இன்று (30-9-2023) தென்காசிக்கு திரும்பும் வழியில், சுற்றுலாப் பேருந்து நீலகிரி மாவட்டம், குன்னூர், பர்லியாறு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்த ஏற்பட்ட விபத்தில்  பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 


​ சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களை விபத்து நடந்த இடத்தில் நடைபெற்றுவரும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்தவும், மேலும் இவ்விபத்தில் படுகாயம் மற்றும் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். 


​உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். 


குன்னூர் விபத்து: மீட்பு பணிகளுக்கு உதவி எண்கள் அறிவிப்பு


நீலகிரி மாவட்டம் குன்னூர் -  மேட்டுப்பாளையம் வழித்தடத்தில், 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து தொடர்பாககோவை மாவட்ட நிர்வாகம் சார்பில்  கட்டுப்பாட்டு அறை எண் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1077 மற்றும் 9443763207 உள்ளிட்ட எண்கள் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.