நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், அஞ்சலி செலுத்துகின்றனர். அவரின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.





நடிகர்கள் சூர்யா, கார்த்தி, மயில்சாமி, கவுண்டமணி, எம்.எஸ்.பாஸ்கர், கவிஞர் வைரமுத்து, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலைமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோரும்  ட்விட்டர் மற்றும் அறிக்கை மூலம் இரங்கல் தெரிவித்தனர். மலையான நடிகர்கள் மோகன்லால். மம்முட்டி அவரது மகன் துல்கர் சல்மான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.


தமிழ் சினிமாவில் விவேக் காமெடியில் உச்சத்தில் இருந்த காலத்தில், அவருக்கு போட்டியாக இருந்தவர் வைகை புயல் வடிவேலு. இது ஆரோக்கியமான போட்டியாக இருந்துள்ளது. அவர்கள் சேர்ந்தும் படித்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். ‘மனதை திருடி விட்டாய்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘விரலுகேத்த வீக்கம்’, ’திருப்பதி ஏழுமை வெங்கடேசா’.  ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிப்பால் நம்மை சிரிக்க வைத்தவர்கள்.




இந்நிலையில், நடிகர் விவேக்கின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் நடிகர் வடிவேலு. கண்ணீர் மல்க விவேக் குறித்து பேசி அனைவரையும் சோகம் அடைய வைத்துள்ளார்.


வடிவேலு அந்த வீடியோவில் பேசுகையில்,  “அவன பத்தி பேசும்போதே துக்கம் தொண்ட அடைக்குது. விழிப்புணர்வு, மரம் நடுதல்னு என்னன்னவோ பண்ணான். அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தையும் மனசுல பதியுற மாதிரி பேசுவான். என்ன பேசுறதுன்னு தெரியல. என்ன விட யதார்த்தமா எளிமையா பேசுவான். நான் அவனுக்கு ரசிகன். எல்லாரும் தைரியமா இருங்க. விவேக் எங்கயும் போகல. மக்களோட மக்களா இருக்கான்” என்று கண்ணீர் மல்க் கூறினார்.