கொரோனா என்ற வார்த்தை ஒலிக்கத் தொடங்கி ஒன்றரை வருடங்களை கடந்துவிட்டது. இந்த குறிபிட்ட காலத்தில் மட்டும் உலகம் பெரிய அளவில் பல மாறுதல்களை சந்தித்து விட்டது. ஒரு உறுப்பாய் மாறிப்போன மாஸ்க், தனிநபர் இடைவெளி, கையில் சானிடைசர், வொர்க் ப்ரம் ஹோம், வீடியோ கால்களில் மீட்டிங், திரையரங்குகள் சுருங்கி ஓடிடி, ஆன்லைன் வகுப்புகள் என எத்தனை எத்தனை மாற்றங்கள். கொரோனாவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் பல்வேறு மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படைய வைத்துள்ளது. பலர் தங்களது தொழில்களை கைவிட்டுள்ளனர். பலர் நகரத்தில் இருந்து சொந்த கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாக இந்த கொரோனா லாக்டவுனும், அது ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியும் எதிர்கால சந்ததியை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. குறிப்பாக கல்வியில் இடைநிற்றலும், குழந்தை திருமணமும் இந்த கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. அது தொடர்பான புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் 42 வயது ஆணை திருமணம் செய்ய இருந்தார். இந்த சம்பவம் நடந்தது சென்னை திருவான்மியூரில். அருகேயுள்ள சிலர் இந்த திருமணம் தொடர்பாக புகாரளிக்க மாணவியின் திருமணம் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் அப்பெண் திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். அதற்குபின் அந்த மாணவியின் நிலை இதுவரை தெரியவில்லை. பள்ளி மாணவிகள் பலர் சான்றிதழ் கேட்டு பள்ளிக்கு வருவதாகவும், அவர்களது அடுத்த இலக்கு திருமணமாகவே இருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார் பள்ளி ஆசிரியர் ஒருவர். குடும்பத்தில் நஷ்டம் என்பதால் இப்போதே திருமணம் செய்ய பெற்றோர் வற்புறுத்துவதாக கூறுகின்றனராம் அந்த மாணவிகள்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த கொரோனா காலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகம் நடப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆர்டிஐ யில் கேட்கப்பட்ட கேள்விக்கு வந்த பதில், 2019ஐ காட்டிலும் 2020ல் தமிழ்நாட்டில் 45% குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது என்பதே.
சமூக ஆர்வலர் பிரபாகர் வெளியிட்ட தகவலின்படி. 2019ல் 2209 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்தாகவும், அதுவே 2020ல் 3208 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குழந்தை உரிமைகள் ஆர்வலர் தேவநேயன் என்பவர் குறிப்பிடுகையில், ''குறிப்பாக நகரங்களில் வாழும் ஏழை குழந்தைகள், குழந்தை திருமணத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். மிகச்சிறிய வீடுகளுக்குள் வாழும் மக்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கண்டு அஞ்சுகின்றனர். அதனால் அவர்களை விரைவாக வேறு வீடுகளுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர் என்றார்.குழந்தை திருமணத்துக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பள்ளிகள் மூடல் தான். கொரோனாவால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் பலர் திருமணத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தை திருமணம் குறித்து பேசிய மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஒருவர் ''கிட்டத்தட்ட 1% மாணவிகள் இந்த கொரோனா ஊரடங்கில் திருமணம் செய்துள்ளனர். மதிப்பெண் சான்றிதழ் கேட்டு அவர்கள் பள்ளிக்கு வருகை தந்த போது திருமணம் விவரமே எங்களுக்கு தெரியவந்தது என்றார்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பக ஆளுநர் ஆண்ட்ரிவ் செஸுராஜ், '' இந்த கொரோனா ஊரடங்கால் பள்ளி மாணவிகள் தங்களது பாதுகாப்பான இடத்தை இழந்துவிட்டனர். பல மாணவிகள் விடுமுறையில் செல்போனில் அதிகளவில் நேரத்தை செலவிடுகின்றனர். இது பல பெற்றோர்களுக்கு வெறுப்பையும், சந்தேகத்தையும் உண்டாக்குகிறது. இந்த காரணத்துக்காகவும் பெண் குழந்தைகள் உடனடியாக திருமணத்தை நோக்கி தள்ளப்படுகின்றனர்.
குழந்தை திருமணம் அதிகரிக்க என்ன காரணம், அதனை எப்படி தவிர்க்கலாம் எனக் கூறிய குழந்தை பாதுகாப்பு நிபுணர் வித்யாசாகர், '' ஒரு ஆள் குறைந்தால் அவருக்கு சாப்பாடு அளிக்க வேண்டியதில்லையே என்ற ஒரு எண்ணம் தான் குழந்தை திருமணத்துக்கு காரணம். வறுமையின் ஒருவித வெளிப்பாடு தான் இது. வயது அதிகமான ஆண்கள் பலர் பணத்தை கொடுத்து பெண் குழந்தைகளை திருமணம் செய்துகொள்கின்றனர். குழந்தை திருமணத்துக்கு உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க அரசு முன்வர வேண்டும். அந்த கோணத்தில் அணுகி அதற்கான மாற்று நடவடிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களுக்கான தேவை தீர்க்கப்படும் வரை குழந்தை திருமணத்தை குறைக்கவே முடியாது. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமே பயன் தராது என்றார்.
தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்கள் எண்ணிக்கை:
மாவட்டங்கள் | 2019 | 2020 |
சென்னை | 18 | 24 |
திருவள்ளூர் | 33 | 70 |
காஞ்சிபுரம் | 49 | 64 |
கோவை | 47 | 89 |
சேலம் | 55 | 256 |
திருச்சி | 162 | 175 |
திருநெல்வேலி | 55 | 120 |
நாமக்கல் | 69 | 224 |
தேனி | 158 | 259 |
குழந்தை திருமணத்துக்கான காரணங்கள்:
- கொரோனாவால் ஏற்பட்ட வருமானம் இழப்பு. வறுமை
- பள்ளிகள் மூடப்பட்ட காரணம்
- பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என உணர்வது
- கொரோனா நேரத்தில் திருமணம் செய்தால் செலவு குறைவு என்பதால்
எப்படி தடுக்கலாம்?
- பெண் குழந்தைகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்
- பெண் குழந்தைகளுக்காக புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி வேலைவாய்ப்பில் ஊக்குவிக்கப்பட வேண்டும்
- பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுதல்
- கிராமம், நகரம் என குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்தல்
- மாவட்ட அளவில் குழந்தை திருமணத்தை தடுக்க அதிகாரிகளை நிர்வகித்தல்
தகவல்கள்: டைம்ஸ் ஆஃப் இந்தியா