காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி உறுதியானதை தொடர்ந்து, கடந்த மே மாதம் 19ஆம் தேதி  அன்று செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையிலேயே சிகிச்சை பலனின்றி மே மாதம் 22 ஆம் தேதி பரிதாமாக உயிரிழந்தார்.




இதன் தொடர்ச்சியாக கொரோனாவால் உயிரிழந்த அலமேலு உடல் உறவினர்களிடம் கொடுக்க முடியாது என்றும் தாங்களே எரித்து விடுவோம் எனவும் கூறி, அவர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் உடலை ஒப்படைக்குமாறு வற்புறுத்தியும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அலமேலுவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் பல முறை கேட்டும் பலனில்லாததால் அலமேலுவின் உடலை செங்கல்பட்டு மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்யப்பட்டதாக உறவினர்களும் நினைத்திருந்தனர்


இந்நிலையில்  3 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலு உறவினருக்கு தொடர்பு கொண்டவர்கள், அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் இருப்பதாகவும், மருத்துவமனைக்கு நேரில் வந்து உடலை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த அலமேலு உறுவினர்கள் மருத்துவமனையில் உள்ள நிலைய மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்  ஆய்வாளர் வினாயகம் மற்றும் காவல்துறையினர், அலமேலுவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்த மருத்துமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.




இதனைத் தொடர்ந்து உடலை பெற்று கொள்வதாக கூறி அலமேலு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் உயிரிழந்த அலமேலுவின் உடலை அடக்கம் செய்ய 2500 ரூபாயும், அலமேலுவின் முகத்தை பார்க்க அவரது உறவினர்களிடம் 500 ரூபாயையும் மருத்துவமனையில் லஞ்சம் வாங்கியதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்தாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.




இது தொடர்பாக, ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் சம்பவம் தொடர்பாக ஆணையத்தின் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. விசாரணை நடத்தி ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X