திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் 50க்கும் மேற்பட்ட வார்டுகளிலும், கூட்டணி கட்சிகளுக்கு 15 வார்டுகள் பிரித்து கொடுக்கவும் முடிவு செய்துள்ளன என்ற  தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால் அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திருச்சி மாநகராட்சியில்  திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்று கட்சிகள் மாநகராட்சியில் தங்கள் கட்சிகளுக்கு கூடுதல் வார்டுகளை பெறவும், அதிலும் தங்களுக்கு சாதகமாக உள்ள வார்டுகளை கூட்டணி தலைமையிடம் கேட்டு பெறுவதில் தீவிரமாக உள்ளது.


கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தங்களுக்குத் தேவையான வார்டுகளை பெற்றுத்தர தங்களது கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகளை வலியுறுத்தி வருகின்றனர்.இதனிடையே திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் 50க்கும் மேற்பட்ட வார்டுகளில் தங்களுக்கும்,  கூட்டணி கட்சியினருக்கு 15 வார்டுகளுக்குள் மட்டுமே ஒதுக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து திமுக வட்டாரத்தில் கேட்டபோது, கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு குறிப்பிட்ட சதவீதம் இடங்கள் பிரித்து கொடுக்கப்படும்.


வார்டுகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும். இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு சதவீத அடிப்படையில் இல்லாமல், கூட்டணி கட்சிகள் மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இடங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர். திமுகவை பொறுத்தவரை வேட்பாளர்கள் வரை முடிவு செய்துவிட்டது. திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் மேயர் பதவியை கைப்பற்ற 33 கவுன்சிலர்கள் தேவை என்றனர்.




மேலும் இந்த முறை மேயர் பதவியை தனித்து கைப்பற்றும் வகையில் 50க்கும் மேற்பட்ட பெருவாரியான வார்டுகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது.மீதமுள்ள 15 வார்டுகளில் காங்கிரஸ், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, தலா 2  வார்டுகள், முஸ்லிம் லீக், மமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 1 ஒரு வார்டு என்று 12 வார்டுகள் வரை ஒதுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஏதாவது ஒரு கட்சிக்கு ஒரு வார்டு அதிகம் ஒதுக்கப்படலாம். மீதமுள்ள வார்டுகள் அனைத்திலும் திமுக போட்டியிடும். அதேசமயம் கூட்டணி கட்சிகள் வலுவாக உள்ள வார்டுகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டணிக் கட்சிகளும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.


இதனால் திமுக கூட்டணியில் வார்டுகள் ஒதுக்கீட்டில் பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிமுக வட்டாரங்களில் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை உட்கட்சி மாவட்ட செயலாளர்களும், கூட்டணி கட்சிகளும், பேசி முடித்து தேர்தல் பணிக்கு தயாராகிவிட்டனர். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை மாநகருக்குள் வரும் 3 மாவட்ட செயலாளர்களும் இதுவரை இணைந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை.


அதன் பிறகுதான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்போதுவரை அதிமுக கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கின்றன இல்லை என்பது தெரியவில்லை. பாஜக கூட்டணி உறுதி செய்ய பட்டிருந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றனர். தமாகா தலைவர் வாசன் மட்டும் கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார். இருந்தாலும் திருச்சி மாநகராட்சியில் மட்டும் பாஜகவினர் 230 பேர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். இதனால் 15 வார்டுகள் வரை கேட்போம் என்று கூறிவருகின்றனர்.




குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவை மீறி அதிக வார்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அதிமுக உள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளை மட்டும் ஒதுக்காமல் அதிக வார்டுகளை  ஒதுக்கினால் அது திமுக கூட்டணிக்கு சாதகமாகி விட வாய்ப்பு உள்ளது என்றனர். மேயர் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கௌரவமான எண்ணிக்கை கவுன்சிலர்கள் உடன் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது  பிடிக்க வேண்டும் என்பது அதிமுகவின் விருப்பம். அதனால் பல வார்டுகளில் தனிப்பட்ட செல்வாக்குடன் உள்ள அதிமுக நிர்வாகிகளை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காக அதிக வார்டுகளில் குறிப்பாக 50 வார்டுகளில்  போட்டியிட வேண்டும் என்பது அதிமுகவின் எண்ணம். அதனால் அதிகபட்சமாக பாஜகவுக்கு 5  வார்டுகள், மற்ற கட்சிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு வார்டுகள் என்று 10 முதல் 12 வார்டுகளுக்குள் ஒதுக்க வாய்ப்புள்ளது.


மீதமுள்ள வார்டுகளில் அதிமுக போட்டியிடும். இந்த முடிவுக்கு கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். இவை தவிர அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளதால் அவை கூட்டணிகள் அமைத்து போட்டியிட்டாலும் தாராளமாக வார்டுகளை பிரித்துக் கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இவற்றுக்கெல்லாம் உரிய விடை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.