உலக வரலாற்றில் ஒரு மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தியாகிகள் தின வீரவணக்க நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் மொழிப்போர் தியாகிகள் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்திலும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதலமைச்சரை தொடர்ந்து, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்ரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். 


1938-39 மற்றும் 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்றைய நாளில் ஆண்டுதோறும் வீரவணக்க நாள் மற்றும் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 


 






முன்னதாக, சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி ,சிவகங்கை ராஜேந்திரன், என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது உயிரை நீத்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் 1960-களில்தான் உச்சத்தை எட்டினாலும், 1930 களிலேயே எதிர்ப்பு தொடங்கிவிட்டது. 


அனைத்து பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக 1938 ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையிலான சென்னை மாகாண அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டோர் வழிகாட்டுதலில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற நடராசன், உடல்குன்றி சென்னை சிறையில் உயிரிழந்தார். மொழிப் போராட்டத்தின் முதல் களப் பலி அவர்தான். அதைத் தொடர்ந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் சென்னை சிறையில் உயிர் நீத்தார்.


நடராசன், தாளமுத்துவின் உயிரிழப்பை தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்ததால், இந்தி பயிற்று மொழி தொடர்பான அரசாணை 1940 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. ஆனால், 1965 ல் இந்திய ஆட்சிமொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அறிவிப்பால், மீண்டும் போராட்டம் உருவானது. அப்போது அண்ணா தலைமையில் தி.மு.க.வின் போராட்டம் உக்கிரமானது. இதில், தீக்குளித்தும், குண்டடிப்பட்டும் மாணவர்கள், இளைஞர்கள் பலர் உயிரைவிட்டனர்.


போராட்டத்தால் நெருக்கடி அதிகரிக்கவே, வேறு வழியின்றி இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் அரசு வந்தது. இதனால் மாணவர்களின் 50 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், 1967-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 50 ஆண்டுகளாக தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து வருகிறது.


இவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண