கொரோனா தொற்று பரவல் காரணமாக தெற்கு ரயில்வேயின் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை நீக்கியிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தென்மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இணைத்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


நாட்டில் கரோனா பாதிப்பு குறைய தொடங்கியபோது, பெரும்பாலான விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. மேலும், பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல் முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கம், விடுமுறை நாட்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்குவது போன்ற பணிகளை ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தல்படி மேற்கொள்ளப்பட்டன. அதுபோலவே, முன்பதிவு இல்லாத ரயில்கள், விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளையும் இணைத்து இயக்க ரயில்வே வாரியம் ரயில்வே மண்டலங்களுக்கு உத்தரவிட்டது.


ஆனால், அதைத்தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் பெரும்பாலான விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படவில்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து மக்களின் கோரிக்கையை அடுத்து ரயில்வே வாரியம் இம்முடிவை எடுத்தது. 


தற்போதுவரை அனைத்து விரைவு ரயில்களிலும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளாவே இயக்கப்பட்டு வந்தன. ஏற்கெனவே, 3 மாதங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதால், உடனடியாக ரத்து செய்ய முடியாத சூழல் இருந்த காரணத்தில் இதுவரை முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டாமல் இருந்தது.


சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மண்டலங்களில் இயங்கும் 192 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது மார்ச் 10 முதல் மே 1 வரை படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று ரயில்வே  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான முழுப் பணத்தையும் பயணிகள் திரும்பப் பெறலாம். இதுபோன்ற டிக்கெட்டுகளை ரத்து செய்வது குறித்து பயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னை-62, திருச்சிராப்பள்ளி-62, மதுரை-23, சேலம்-15, பாலக்காடு-33, திருவனந்தபுரம்-41 ஆகிய எண்ணிக்கையில் முன்பதிவு இல்லதா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண