ஆணும் பெண்ணும் சமம் என்கிறது இந்திய அரசமைப்பு. ஆனால் நடைமுறைக் கற்பிதங்கள் வேறுவிதமாய் இருக்கின்றன. இன்றளவிலும் பாலினச் சமத்துவம் என்ற வார்த்தை அநேகர்களால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது.
பாலின சமத்துவம் பெண்களுக்கானது மட்டுமில்லை, அது ஆண்களுக்கு எதிரானதும் அல்ல. ஆணும் பெண்ணும் சமம் என்பதே பாலினச் சமத்துவம். ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாய்ப் பிறப்பதற்கும், உடலில் உள்ள இனப்பெருக்க செல்களின் குரோமோசோம்கள்தான் காரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆனாலும் பாலின வேறுபாடு காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குடும்பங்களில்தான் அதற்கான ஆரம்பப் புள்ளி வைக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போதே இதுபோன்ற சொல்லாடல்களைக் கேட்கலாம்.
* பொண்ணு மாதிரி நடந்துக்க, பொறுமையாகப் பேசணும். சத்தமாப் பேசக்கூடாது.
* கெஸ்ட் வந்திருக்காங்க. கொஞ்சம் வீட்டு வேலைல எனக்கு ஒத்தாசையா இரு.
* பொண்ணுங்க இன்னொரு வீட்டுக்குப் போகணும். எல்லார்கிட்டயும் கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்.
* அவன் ஆம்பிளைப் பையன், சட்டையில்லாமகூட ரோட்டுல நடப்பான். பொண்ணுங்களால அப்படி நடக்க முடியுமா?
ஆண் குழந்தைகளுக்கும் பாலின வேறுபாடு அவர்கள் அறியாமலேயே புகுத்தப்படுகிறது.
* பொம்பள மாதிரி ஏன் அழற? பசங்கள்லாம் அழவே கூடாது. தைரியமா இருக்கணும்.
* நீ ஏன் கிச்சன்லயே இருக்க? இது உன்னோட இடம் கிடையாது. போய்ப் படி!
* பையன்தானே நீ. இதைக்கூட செய்ய மாட்டியா? பொட்டப்புள்ள மாதிரி நடந்துக்காதே. (தவறான செயல்களை ஊக்குவிப்பது!)
இந்த சூழலில், குடும்பங்களில் பெண்களுக்கும் முக்கியமாக ஆண்களுக்கும் பாலினச் சமத்துவம் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
கல்வி நிலையங்களில் பாலின அறிமுகம்
அடுத்ததாகக் கல்வி நிலையங்களில் பாலினம் குறித்த கல்வியை அறிமுகம் செய்யவேண்டும். பாரினில் அனைவரும் சமம் என்று பயிற்றுவிக்கப்பட வேண்டும். இது தேர்வுக்கான பாடமாக இல்லாமல், மனப்பாடம் செய்வதாக அல்லாமல் விவாதத்துக்கான புள்ளியாக இருக்கவேண்டும்.
2020-ல் இந்திய ஒட்டுமொத்த மக்கள் தொகையில், 108.18 ஆண்களுக்கு 100 பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆண் - பெண் விகிதம் முறையே 51.96 ஆகவும் 48.04 ஆகவும் உள்ளது. பிறப்பும் இறப்பும் அனைத்துப் பாலினங்களுக்கும் பொதுவானது. ஆனால் அவை இரண்டும் இடையிலான வாழ்வு சமத்துவத்துடன் இருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
வாழ்க்கைப் படிநிலைகளில் சமத்துவம்
பாலியல் (sex) என்பது இயற்கை. ஆனால் பாலின (gender) சமத்துவம் என்பது சமூகத்தால் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டது. ஆண் - பெண் பேச்சுரிமை, கல்வி, பணி, ஊதியம், சொத்துரிமை, பொது இடங்களில் பாதுகாப்பு உரிமை என வாழ்க்கையின் படிநிலைகள் அனைத்தையும் வைத்தே பாலின சமத்துவம் கணக்கிடப்படுகிறது.
சமுதாயத்தில் குறிப்பிடத்தகுந்த அளவிலான பெண்கள் பாலியல் சமத்துவத்தை நோக்கி நகர்ந்து வருவது உண்மைதான். ஆனால் அது மிகச் சொற்ப அளவிலான பெண்கள் மட்டுமே. ஆனால் அவர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதா? அதற்கு இந்தச் சமூகம் அனுமதிக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இந்த சூழலில், கிராமப்புறங்களில் வாழும், விளிம்புநிலை, ஒடுக்கப்பட்ட பெண்களின் நிலை பெரும்பாலும் கவலைக்குரியதாகவே உள்ளது. அவர்களின் அன்றாடமும் அதற்குத் தேவையான பொருளாதாரமும் பிறரைச் சார்ந்தே அமைகிறது.
பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுப்பது, வேலைக்குச் செல்வது, திருமணம் செய்துகொள்வது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளையும், ஏன் பேசும் சுதந்திரத்தைக் கூட பெண்கள் போராடிப் பெற வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.
ஊதிய ஏற்றத்தாழ்வு
உயர் கல்வியில் ஆண்களைவிட அதிக அளவில் பெண்களே படிக்கின்றனர். ஆனாலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒப்பீட்டளவில் குறைவு. அதேபோலப் பெறும் ஊதியத்திலும் பதவி உயர்விலும் தொடர்ந்து ஏற்றத்தாழ்வுதான் நீடிக்கிறது. திறமை சமமாக இருந்தாலும் நிறுவனங்களில் உயர் பதவிகளை ஆண்களே அதிகம் அலங்கரிக்கின்றனர்.
ஒரு பெண் தடைகள் பல தாண்டி, படித்து முடித்து தலைசிறந்த நிறுவனத்தில் நல்ல வேலையைப் பெறுகிறார். தன் திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்த இடத்தை நோக்கிப் பயணிக்கிறார். ஆனால் திருமணத்துக்குப் பிறகு, வீட்டுப் பணிகளையும் குழந்தை வளர்ப்பையும்காட்டி, அந்தப் பெண் வேலைக்குச் செல்வது நிறுத்தப்படுகிறது. இது நிறையப் பெண்களின் வாழ்க்கையில் இயல்பான நிகழ்வாகிவிட்டது. துப்புரவுப் பணியாளரில் இருந்து, பன்னாட்டு நிறுவனத்தில் பெரும்பதவி வகித்த இந்திரா நூயி வரை இந்த சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
உலக அளவில், உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் பாதிப் பேர் மட்டுமே வேலைக்குச் செல்கின்றனர் என்கிறது ஐ.நா. இதனாலேயே இந்திய நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள பெண்களின் சதவீதம் வெறும் 3.7 சதவீதம் மட்டுமே. இந்தியாவில் 85% பெண்கள் பாலினப் பாகுபாடு காரணமாக பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றில் வாய்ப்புகளை இழக்கின்றனர் என்று லிங்க்ட்இன் ஆய்வு கூறுகிறது. இதில் தனித்துத் தொழில்முனையும் பெண்களின் நிலை இன்னும் மோசம்.
என்ன செய்யலாம்?
குடும்பத்திலும் பணியிலும் சுயமாக முடிவெடுத்தல், பொருளாதாரத்தைக் கையாளுதல், அதிகார மைய நீரோட்டத்தில் பங்குகொள்ள வைத்தல் போன்றவற்றின்மூலம் பெண்பாலினத்துக்கு சமத்துவத்தை நிறுவ முடியும். அதே நேரத்தில் ஒட்டுமொத்தக் குடும்பப் பொறுப்பு பாரத்தையும் ஆண்கள்மீது சுமத்தக்கூடாது.
என் மனைவிக்கு / மகளுக்கு எல்லா சுதந்திரமும் கொடுக்கிறேன், அவள் வேலைக்குப் போவதை அனுமதிக்கிறேன் என்பது ஆண் மைய சமூகத்தின் வளர்ச்சியாக இருக்கிறது. சமூக நீதி பேசும் பலரே, பாலினச் சமத்துவத்தை உணர்வதில்லை அல்லது உணர்ந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இதை முன்னிட்டே நான் பாலினச் சமத்துவம் பேணுபவர்: பெண்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளுதல் என்ற மையக்கருத்து கடந்த ஆண்டின் கருப்பொருளாக இருந்தது. இந்த ஆண்டும் பாலினச் சமத்துவமே பெண்கள் தினத்தின் கருப்பொருளாய் இருக்கிறது.
வாழ்தல் பெண்களின் உரிமை. அதைச் செய்து மகளிருருக்கு உதவுவதாய் எந்த ஆணும் பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை. மகளிருக்கான உரிமையைக் கேலி செய்யவும் தட்டிப் பறிக்கவும் வேண்டியதில்லை. இதை ஆண்களும், பெண்களும் புரிந்துகொண்டாலே போதும். பாலினச் சமத்துவம் தழைக்கும், பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் தானாய்க் கிடைக்கும்.