தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை திடீரென கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடும் சிரமம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாகவே அதிகாலை நேரங்களில் தொடர் பனிப்பொழிவு இருந்து வந்தாலும் வழக்கத்துக்கு மாறாக இன்றையதினம் அதிகாலை 4 மணியில் இருந்து 8 மணி தாண்டியும் சாலைகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக மழை பெய்துவரும் நிலையில், செங்கல்பட்டில் அதிகாலையில் பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் மக்களை வாட்டி எடுக்கிறது. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பனியால் மறைக்கப்பட்டிருந்தது. சாலையோரத்தில் இருக்கும் மரங்கள், ஆற்றுப் பாலங்கள், ரயில்வே பாலம் உள்ளிட்டவை தெளிவாக கண்ணுக்குத் தெரியாததால், பேருந்து, லாரிகள், வேன்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் முகப்பு விளக்கை எரியவிட்டு மெதுவாகச் செல்ல நேரிட்டது. காலை 8 மணிக்குப் பின்னர், படிப்படியாக பனி மூட்டம் குறையத் தொடங்கியது.
குறிப்பாக கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், படாளம் ,திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமண்டூர் சாலை, கருங்குழி, மதுராந்தகம் அச்சரபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் இருந்தே கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியவேண்டும் என்பதற்காக எரிய விட்டு வந்தாலும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக எதிரில் வரும் வாகனத்திற்கு கூட விளக்கு ஒளி, தெரியாத காரணத்தினால் ஆமை வேகத்தில் வாகனங்கள் நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு அரை மணி நேரம் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என தெரிவித்தனர். நேரம் போகப் போக இதே அளவு பனிமூட்டம் தொடர்ந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.,