தமிழ்நாட்டின் மறைந்த முதல்வரும், அ.தி.மு.க.வின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அவரைப் பற்றி தெரியாத பல தகவல்களை கீழே காணலாம்,



  • கணிக்க முடியாதவர் :


முதல்வராக இருந்தபோதும் சரி, நடிகராக இருந்தபோதும் சரி எம்.ஜி.ஆரை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. அவரது அரசியலுக்கும் அது பெரிதும் உதவியது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அப்போதைய ஆளுநர் கீழே தடுக்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக புறப்பட்ட எம்.ஜி.ஆர்., சட்டென்று காரை தனக்கு தெரிந்த இயக்குனர் ஒருவரின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார்.




அதேபோல, தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை எம்.ஜிஆர். தொடங்கியது முதல் அ.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர். முதல்வராக பொறுப்பு வகித்த பிறகும் இந்த முயற்சி தொடர்ந்தது. இதற்காக அப்போதைய ஒடிசா முதல்வர் பிஜீ பட்நாயக் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எம்.ஜி.ஆர். முதல்வராகவே தொடர்வார் என்றும், கருணாநிதி கட்சியின் தலைவராக தொடர்வார் என்றும் முதற்கட்ட பேச்சுவார்த்தை காலை இனிதாக நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மாலை நடைபெற இருந்த நிலையில், எம்.ஜி.ஆர். அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டார்.



  • புரட்சித்தலைவர் :


தமிழ் திரையுலகை கட்டி ஆண்ட எம்.ஜி.ஆர். மக்கள் செல்வன், மக்கள் திலகம், புரட்சித் திலகம், பொன்மனச் செம்மல் என்று பல செல்ல பெயர்களால் ரசிகர்களாலும், மக்களாலும் அழைக்கப்பட்டனர். அவர் தி.மு.க.வில் இருந்து விலகி, 1972ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்தியபோதுதான் எம்.ஜி.ஆர். இனி புரட்சி நடிகர் அல்ல, புரட்சித்தலைவர் என்று பட்டம் சூட்டப்பட்டது. இந்த பட்டத்தை சூட்டியவர் கே.ஏ.கிருஷ்ணசாமி.



  • கருணாநிதியின் மீது பாசமும், மரியாதையும் :


அரசியல் ரீதியாக கருணாநிதியுடன் கடும் கருத்து மோதலை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தாலும், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் தொடக்க காலம் முதலே தீவிர நண்பர்கள். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமாகவே இருவரது நட்பும் நெருக்கமடைந்தது. அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் எம்.ஜி.ஆர். தனது கட்சியினர் கருணாநிதியை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பவில்லை.




கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தவிர பிற நபர்கள் எம்.ஜி.ஆர். முன்னால் கருணாநிதியை பெயர் சொல்லி பேசுவதை எம்.ஜி.ஆர். எப்போதும் விரும்பியதில்லை. அதேபோல, சட்டசபையில் சந்திக்கும்போது பொது வெளிகளில் நிகழ்ச்சிநிரல்களில் சந்திக்கும்போதும் கருணாநிதியை கண்டால் நலம் விசாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.



  • திருக்கழுக்குன்றத்தில் தொடங்கிய புதிய பயணம் :


தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்த எம்.ஜி.ஆர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு, கட்சியின் கணக்குவழக்குகளை கேட்டதால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். கட்சியின் கணக்குகளை கேட்டார்.



  • அரசியலால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு எம்.ஜி.ஆர்.


அரசியலில் தீவிரமாக ஈடுபட்டாலும் எம்.ஜி.ஆர். எப்போதும் சினிமா மீது தீராத மோகத்தை கொண்டிருந்தார். முதல்வராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர். திடீரென தான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.





ஆனால், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்தாலும், அப்போதைய மத்திய அரசு அளித்த அழுத்தத்தாலும் அவர் அந்த படத்தை கைவிடுவதாக அறிவித்தார். அவ்வாறு எம்.ஜி.ஆர். அறிவித்த படம் பெயர் “உன்னை விட மாட்டேன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமானவர் இளையராஜா.



  • துரைமுருகனை ஆளாக்கிய எம்.ஜி.ஆர்.


கருணாநிதியின் நெருங்கிய நண்பராகவும், தி.மு.க.வின் தூணாகவும் வலம் வருபவர் துரைமுருகன். கருணாநிதி மீது தீராத பற்று கொண்ட துரைமுருகனை எம்.ஜி.ஆர். தான் படிக்கவைத்தார். கார்டியன் என்ற முறையில் துரைமுருகனுக்கு கல்லூரி காலத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர். பல முறை தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.விற்கு வந்துவிடுமாறு துரைமுருகனுக்கு அழைப்பு கூட விடுத்தார் எம்.ஜி.ஆர். அந்தளவு துரைமுருகன் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் எம்.ஜிஆர்.


எம்.ஜி.ஆர். இதுபோன்று பல சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு சொந்தக்காரராக வலம் வந்தார். கட்சி தொடங்கியது முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதல்வராகவே எம்.ஜி.ஆர். பவனிவந்தார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண