தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ரியாலிட்டி ஷோ நடக்கிறது. அதில் சிறுவர்கள், சிறுமிகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை காட்டிவருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் இரண்டு சிறுவர்கள் மன்னன் போல் வேடமிட்டும், அமைச்சர் போல் வேடமிட்டும் நகைச்சுவை நிகழ்ச்சி செய்தனர். நிகழ்ச்சியில் இருவர் செய்த உரையாடல்களுக்கும் அந்த நிகழ்ச்சியில் நடுவர்களும், மற்ற பங்கேற்பாளர்களும் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.
இரண்டு பேர் நடத்திய உரையாடலில், “நம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது கறுப்பு பணம். எல்லா பணத்தையும் செல்லாதுன்னு சொல்லிடப்போகிறேன். அப்போதானே கறுப்பு பணம் ஒழிஞ்சிடும்ல, எங்க கறுப்பு பணத்த ஒழிச்சாரு கலர் கலரா கோட்ட மாட்டிட்டு திரியுறாரு, நம் நாட்டுக்குள் சென்றால்தான் அது நகர் வலம். நாடு நாடாக சென்றால் அது ஊர்வலம், தென் நாட்டு பக்கம் மன்னராக சென்றாலே நம்மை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில் திமுக எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சிரித்து சிந்தித்து மகிழ என குறிப்பிட்டு சிறுவர்களின் வீடியோவை பகிர்ந்திருந்தார். இதற்கிடையே வசனங்கள் யாவும் பிரதமர் மோடியை விமர்சிக்கும் தொனியில் இருக்கிறது என பாஜகவினர் தங்கள் முஷ்டியை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றனர்.
ஆனால், இது வெறும் நகைச்சுவை காட்சிதான் இதிலும் பாஜகவினர் அரசியல் செய்ய தேவையில்லை என ஒரு தரப்பினரும், இல்லை இது பிரதமரைக் குறிக்கிறது என ஒரு தரப்பினரும் கூறி தங்களது சமூக வலைதள பக்கங்களில் வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய இணை அமைச்சர் முருகன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பிரதமர் மாண்பை குறைப்பதுபோல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக குழந்தைகள் நிகழ்ச்சியை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது. திமுகவின் குடும்ப அரசியல் பற்றி பேச முடியுமா? ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கு சவால். பேச்சு சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்