இலங்கையில் 13வது சட்ட திருத்தம் தமிழ்நாடு மீனவர்கள் நலன் குறித்து பேசவும், பிடிபட்ட படகுகளை மீட்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று மதியம் 12.30 மணியளவில் இலங்கைக்கு செல்கின்றனர். 


இந்திய தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தொடர்ந்து பாக் நீரிணை, மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாடு - இலங்கை கடல் எல்லைகளில் இருந்து வருகிறது. இரு நாடுகளின் மீனவர்கள் கடல் எல்லைகளை தாண்டுவதும் அதனால் கைது செய்ப்படுவதும் மீண்டும் அவர்களை விடுவிப்பதும் என்று இருக்கிறது. இதுவரை சர்வதேச கடல் எல்லை கோட்டுக்காண (ஐ.எம்.பி.எல்) (International Maritime Boundary Line ( IMBL)) ஒப்பந்தம் மூலமே தீர்வு காணப்பட்டு வருகிறது.


தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.


2006ல் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இது குறித்து பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக கட்சத்தீவை நிரந்தர குத்தகைக்கு எடுக்கலாம் என்று அறிவுறுத்தினார். 


பல ஆண்டுகளாக,  தொடர்கதையாக, இதுபோன்ற கைது, தாக்குதல் படலங்கள் நடந்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.  ”கடல்பகுதி மிகக்குறுகிய கடல்பகுதியாக இருப்பதால், தமிழக மீனவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் நுழைய நேரிடுகிறது. ராமேசுவரத்திலிருந்து 12 கடல்மைல் தூரத்தில் சர்வதேச எல்லை வந்துவிடுகிறது. பாரம்பரிய நாட்டு படகுகள் முதல் 3 கடல்மைல் தூரம் வரை மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. பின் 7 கடல்மைல் வரை பாறைகள் இருப்பதால் அதனை தாண்டி தான் மீன் பிடிக்க வேண்டும். அதனால் 8 முதல் 12 கடல்மைல் வரை மட்டுமே மீன் பிடிக்க முடியும்.  8-வது கடல்மைல் எல்லையில் தொடங்கி சற்றுதூரம் சென்றவுடனேயே சர்வதேச கடல் எல்லை வந்து விடுகிறது. அங்கு கிடைக்கும் இறாலை பிடிக்கும் போது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.


இலங்கை கடல்பகுதிக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் அங்கே போகாமல், மற்ற பகுதிகளுக்கு எங்களால் செல்ல முடியும்” என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.க் தலைவர் அண்ணாமலை இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த இலங்கை செல்கின்றனர். சென்னை பாலவாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் உள்ளவர்களோடு நட்புணர்வோடு இருந்து வருகிறோம், ஜாப்னா நகரில் 11ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகிதியாக கலாச்சார மையம் தயாராகி வருகிறது. இதனை   இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்று திறந்து வைக்கிறார்.


 இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களின் 111 படகுகள் உள்ளது. அதனை விடுவிக்க இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் பேசப்பட உள்ளோம்” எனத் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது என கூறினார்.


தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பேச்சாக மட்டும் அரசியல் செய்து வருகிறது. ஆனால் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்றார். குறிப்பாக ஜாப்னாவில் விமான நிலையத்தை பிரதமர் மோடி கட்னிக்கொடுத்துள்ளார் என்றும், கொழும்பு- ஜாப்னா இடையே ரயில் சேவை 2.1பில்லியன் டாலர் மதிப்பில் இந்திய அரசு தமிழர்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.