உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என நேற்று (பிப்.08) இந்திய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது.


மேற்கத்திய பண்பாடுகளால் நம் வேத கால பழக்கவழக்கங்கள் அழியும் நிலையில் உள்ளதாகவும், பசுவை அரவணைப்பதன் மூலம் பேருவகை அடைய முடியும் என்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் நேற்று சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.


ஒரு புறம் வட இந்திய மாநிலங்களில் மாட்டின் பெயரால் நடக்கும் அரசியல் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இந்தியாவில் சுமார் 80 லட்சம் மக்கள் மாட்டுக்கறியை உணவாக உட்கொண்டு வரும் நிலையில், ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாக மாட்டிறைச்சி விற்பதாகக் கூறி, தலித்துகள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவது அதிகரித்து வரும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில்,  ”தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வாழ்க்கையை நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றும் வகையில் பசுப் பிரியர்கள் அனைவரும் பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினம் கொண்டாட வேண்டும்” என்றும் விலங்குகள் நல வாரியம் கோரியுள்ளது.


காதலர் தினமே மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் எனக் கூறி அதற்கு எதிராக வலதுசாரிகள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் இந்த கோரிக்கை வெளியாகியுள்ளது.


இந்நிலையில், எம்.பி சு.வெங்கடேசன், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக ஐடி விங் மாநிலச் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா  உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


 






மேலும், இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு சில நாள்களுக்கு முன் இப்படியொரு வித்தியாசமான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எதிர்ப்பை பெற்று வருவதுடன் இணையத்தில் ட்ரோல்களையும் சம்பாதித்து வருகிறது. 


 






இந்திய சினிமாக்களில் பசுக்களுடன் கதாநாயகர்கள், நாயகிகள் தோன்றும் காட்சிகளையும் காமெடியான பசு வீடியோக்கள், மீம்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களில் இணையவாசிகள் ரகளை செய்து வருகின்றனர்.


 






 






மற்றொருபுறம் விலங்குநல ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை வரவேற்பதாக மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.