மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க., .அ.தி.மு.க. ஆகிய பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


நீட் விலக்கு மசோதா:


கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.


இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்திற்கு பதில் தந்த குடியரசுத் தலைவர் தரப்பு நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தனர்.


கடிதம் வரவில்லை:


இதையடுத்து, தற்போது குடியரசுத் தலைவரின் பதிலின் அடிப்படையில் உள்துறை அமைச்சகத்தில் எம்.பி.யின் கடிதம் என்ன நிலையில் இருக்கிறது? என்பது குறித்து தெரிந்த கொள்வதற்காக கஜேந்திரபாபு  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரால் அனுப்பிய கடிதத்தை பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ள இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்படும் ஆவணங்கள் மாயமானது எப்படி? என்று புதிய விண்ணப்பத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பி உள்ளார்.


தமிழ்நாட்டில் பா.ஜ.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி, அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள், மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளதால் மக்கள் மத்தியிலும் நீட் தேர்விற்கு பெரியளவில் எதிர்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: நோய் இருப்பதை போன்று நடிக்கிறார்... உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அதிரடி வாதம் வைத்த அமலாக்கத்துறை..!


மேலும் படிக்க: Kalaignar Kottam: ஆழித்தேர் வடிவில் கட்டமைக்கப்பட்ட கலைஞர் கோட்டம்.. இன்று திறந்துவைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்