பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இன்று மாலை அவர் திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறந்து வைக்க இருந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பிகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு வருகை தருவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






மறைந்த திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாட திமுக அரசு முடிவு செய்துள்ளது. திருவாரூரில் 7 ஆயிரம் சதுரடியில் 12 கோடி ரூபாய் மதிப்பில் ஆழித்தேர் வடிவில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது. 


இந்த கோட்டத்தில், கருணாநிதியின் இளமை கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள் கட்டுரைகள் என காட்சி படுத்தப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தின் முன்பக்கத்தில் மளிகை கற்களால் கலைஞர் திருவுருவ சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கலைஞர் கோட்டம் முதலில் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அன்று ஒடிசா மாநிலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ரயில் விபத்து ஏற்பட்டது. இதனால் அன்று ஒரு நாள் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. பின் ஜூன் 15 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக இன்று திறந்து வைக்கப்படுகிறது.


இதனை பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் திறந்து வைக்க இருந்த நிலையில், அவரது பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பீகார் துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ் வருகை தருவார் என கூறப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ள கலைஞர் கோட்டத் திறப்பு விழாவில் பங்கேற்க  வருகை தந்த எம்பி திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ வருகின்ற 23ஆம் தேதி பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் பாஜக அரசு எதிர்ப்பு கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்துக்கொள்கிறார்” என கூறினார்.