தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
கருணாநிதி நினைவு நாணயம்: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திறங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " நா நயம் மிக்க கலைஞருக்கு நாணயம் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. கலைஞர் உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம். இப்போது இந்தியாவே கொண்டாடுகிறது என்பதற்கு இதுவே அடையாளம்.
பாதுகாப்பு துறை அமைச்சர் நாணயத்தை வெளியிட்டது மிக மிக பொருத்தமானது தான். கடந்த ஓராண்டாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம், மகளிர் உரிமைத்தொகை, மதுரை கலைஞர் நூலகம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை, திட்டங்களை பட்டியலிட்டு சொன்னால் ஒருநாள் போதாது.
கலைஞரின் நாணயத்தை வெளியிட ஒப்புக்கொண்ட மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்த நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ராஜ்நாத் சிங் அவர்களை தான் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டுமென என் மனதில் நினைத்திருந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அனைத்து முதலமைச்சர்கள் நாட்டில் கொடி ஏற்றினார்கள். அதற்கான அத்தனை உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. செயல்படுவதும், செயல்பட வைப்பதும் அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கருணாநிதி. இது எனது அரசு அல்ல நமது அரசு, ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு" என்றார்.