”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்வில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஆட்சி அமைந்த 100 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தேன். அதன்படியே, நேற்றே தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அவரிடம் இன்று மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன என முதல்வர் மு.க ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டார். 


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திமுக  அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் மக்கள்  பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். என்ற உறுதிமொழியை அளித்திருந்தார். 




 


இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி முதல் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என கலந்துரையாடல் சந்திப்பை  மேற்கொண்டார். ஒவ்வொரு சந்திப்பிலும், அத்தொகுதியைச் சேர்ந்த கோரிக்கை  மனுக்கள் பெறப்பட்டு பதிவுசெய்யப்பட்டு தனித்தனிப் பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் முதல்வர் ஸ்டாலின் முன்பாக பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது. 






இந்நிலையில், நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமயிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று தமிழ்நாட்டின் புதிய அரசாகப் பொறுப்பேற்றுக் கொண்டது. இதனையடுத்து, ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய துறை தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது .


ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.