பொது விநியோக முறை மூலமாக வழங்கப்படவுள்ள கொரோனா நிவாரண நிதியை பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தாமல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் இருந்தும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதலாவது அலையின்போது, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாராம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடை மூலம் அரிசி வாங்கும் கார்டுதார்களுக்கு ரூ.1000 நிவாரண நிதியை வழங்கினார். தொடர்ந்து இந்த நிதியை குறிப்பிட்ட சில மாதங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், முதல்வர் அந்த நிதியை வழங்கவில்லை. 


அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ஊரடங்கு காலத்துக்கான உணவுப் பொருட்களை இலவசமாக சில மாதங்களுக்கு வழங்கினர். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது, தற்போதைய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா நேரத்தில் எங்களுக்கு 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிமுக அரசு வழங்காமல் விட்ட 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம், அதுவும் கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் தேதி அந்த தொகை வழங்கப்படும் என பிரச்சாரத்தில் எடுத்துரைத்தார் ஸ்டாலின். மேலும் இதுகுறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.


                                                                       

                                                                       


இந்நிலையில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆட்சி பொறுப்பேற்றுள்ளனர். ஆட்சி பொறுப்பேற்ற 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வரும் 10-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உத்தரவிட்டு கையெழுத்திட்டார். இந்நிலையில் உணவு பொருள் வழங்கல் துறை மூலமாக கொரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து நடைமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டு, காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே நிவாரண நிதி 500 ரூபாயாக நான்கு தாள்களும் அல்லது இராண்டாயிரம் ரூபாயாக ஒரு தாளும் வழங்க வேண்டும். குடும்பத் தலைவர் மட்டுமே வந்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்துவிட்டு பணத்தை பெற்றுச் செல்லவேண்டும் என கூறப்பட்டுள்ளது.


ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக் முறையில் சர்வர் இணைப்பு கிடைக்காமல் காலதாமதம் ஆவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஒவ்வொருவரும் கைரேகையை பதிவு செய்யும் போது அதன் மூலம் கொரோனா தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ரேஷன் பொருட்களும், நிவாரண நிதியும் ஒரே நேரத்தில் வழங்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் கடைகளில் வெயில் காலத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பயோமெட்ரிக் முறை இல்லாமல், ரேஷன் கார்டு வைத்திருக்கும் கார்டுதார்களுக்கு நிவாரண நிதியை வழங்கும்போது காலதாமதம் தவிர்க்கப்படும். நிவாரண நிதிக்கான டோக்கன் வீடுகளுக்கு சென்று வழங்கும்போதே, அந்த தொகையையும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.