காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ வேல்முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்போதும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த நிலையில் தான், தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தது. அப்போது அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் போராட்டம் நடைப்பெற்றது. இந்தப்போராட்டத்தால் சென்னை - திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அந்தப்போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுக்கு நடுவில், கட்சித் தொண்டர்கள் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளையெல்லாம் அடித்து நெறுக்கினர். இதனையடுத்து கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட சுமார் 500 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சித்தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு போலீசார் இவர்களை கைது செய்திருந்தனர். பின்னர் வேல்முருகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது , வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகாத வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 9 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேப்போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு போராடியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏழு தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் காவல்துறை சார்பிலும் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.