மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதல் நூறு நாட்கள் எப்படி இருந்தது என்ற பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை ஏபிபி நாடு செய்தி தளம் இன்று வெளியிட்டுள்ளது.

  



  1. மு.க ஸ்டாலின் அரசின் முதல் 100 நாட்கள் எப்படி இருந்தது?

  2. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு எதிராக  வெள்ளை அறிக்கை தேவை தானா?

  3. மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை எவ்வாறு கையாண்டார்

  4. மத்திய அரசை ' ஒன்றிய அரசு' என்று அழைப்பது  தேவை தானா?

  5. முதல் 100 நாட்களில், மத்திய அரசு உடனான இருதரப்பு உறவுகள் எப்படி இருந்தது?

  6. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?

  7. 100 நாட்களில் சரிசெய்வோம்... 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'  திட்டத்தை நிவர்த்தி செய்ததா திமுக?

  8. திமுக அமைச்சர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் எப்படி?

  9. கட்டணமில்லா பயண வசதி அளிக்கும்  திட்டம் மகளிருக்கு அதிகாரமளிக்குமா?  


உள்ளிட்ட 9 கேள்விகளுக்கு மக்கள் கருத்தை அறிந்துகொள்வதற்கான இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


 


                       


 


2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் மற்றும் இதர கட்சிகளுக்கு வாக்களித்த  4,516 வாக்காளர்களிடம் பெற்ற பதில்கள் கொண்டு கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.     






ஏன், இந்த கருத்துக் கணிப்பு முக்கியம்: பொதுவாக, தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேர்தல்களில் யார் அல்லது எந்தக் கட்சி வெல்லக்கூடும் என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவதற்குப் பயன்படுகின்றது. ஆனால், இத்தகைய கணக்கெடுப்புகள் மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள் இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமல் அதிகாரத்தை தக்க வைப்பது கடினம். கூட்டணி காட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக தங்களுக்கு முற்றிலும் விருப்பமில்லாத வேட்பாளருக்கும், கட்சிக்கும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். மேலும், ஆட்சியில் வரக்கூடிய கட்சியைப் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பை (எதிர்காலத்தை) மட்டும் தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே,தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் மக்களின் முழுமையான அரசியல் நிலைபாடுகளை வெளிக்கொணர்வதாக இல்லை.




ஆனால், தற்போது வெளியாகியுள்ள 'ஏபிபி நாடு' செய்தி தளத்தின் கருத்துக் கணிப்பு முடிவுகள் மக்களின் தற்போதைய எண்ண ஓட்டங்கள் நாடி புடித்து பார்த்துள்ளது. கடந்த 100 நாட்களில் மக்கள் ஜனநாயகத்தை உள்வாங்கிய விதம், அதிகாரத்தின் வலிமை, ஆட்சிக்கும்-தங்களுக்கும் உள்ள இணைப்பு, வழங்கப்பட்ட உரிமைகள், எதிர்கொள்ளும் சவால்கள்/வேதனைகள், திமுக முன்னெடுக்கும் அரசியல் சொல்லாடல்கள், அதன் தாக்கங்கள், வாக்கு வங்கி தாண்டிய அரசியல் புரிதல்களை இந்த முடிவுகள் வழங்குகின்றன. 


இது கூறும் அரசியல் சமிக்ஞை என்ன? 


மு.க ஸ்டாலின் தலைமையிலான முதல் நூறு நாட்கள் மிகச் சிறப்பாக இருந்ததாக மதிப்பீடு செய்துள்ளனர். இது, இந்தக் கணிப்பின் நேரடி பதிலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதைத் தாண்டி, தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பல்வேறு அரசியல் மாற்றங்களையும் இது விளக்குகிறது.  உதாரணமாக, கட்டணமில்லா பயண வசதி அளிக்கும் திட்டம் மகளிருக்கு அதிகாரமளிக்குமா? திமுக அமைச்சர்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் எப்படி? உள்ளிட்ட நான்கு கேள்விகளுக்கு திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களை விட அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் தான் அதிகம் மதிப்பளித்துள்ளனர். 




மேலும், 'மத்திய அரசை' ஒன்றிய அரசு என அழைப்பது தேவை தானா? என்ற கேள்விக்கு அதிமுக, கூட்டணிக்கு வாக்களித்தவர்களில் 53.2% தேவை தான் என்று பதிலளித்துள்ளனர். திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை  55.9% ஆக உள்ளது. மேலோட்டாமாக பார்த்தால், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் பொருத்தமற்றவையாகவும், முரண்பாடுகள்  கொண்டவையாகும் ஒருவர் கருதலாம். ஆனால், தமிழக அரசியல் வரலாறுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், உண்மைகள் புரிய வரும்.   


சிந்தாந்த ரீதியிலான அரசியல் வலுப்பெறுகிறது:    


பொதுவாக, தமிழக தேர்தல்கள் இலவசங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. அது, முற்றிலும் தவறானது என்பதைத் தான் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.   


பொதுவாக, ஒரு அரசியல் சமூகத்தில் 



  1. குடிமக்களை வாக்காளர்களாக பார்க்கும் தலைமை பண்பு,

  2. சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்  தொலைநோக்கு கொண்ட தலைமை பண்பு   


என இரண்டு வகையான தலைமை பண்புகள் உருவாகுவது உண்டு. 


அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற மேற்கத்திய நாடுகளில் முதலாவது அரசியல் தலைமை பண்பு காணப்படுகிறது. ஏனெனில், அங்கு வர்க்க ரீதியான, இன/ரீதியான, சமூக ரீதியான, மத ரீதியான பிளவுகள் தான் அரசியலை இயக்குகின்றன. அதாவது, அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதற்கு முன்பே சமூக ரீதியிலான அடையாளங்கள் உருவாகிவிட்டன. எனவே, அங்கு தலைவர் என்பதைத் தாண்டி அமைப்பு ரீதியிலான கட்சிகள் தான்  வாக்காளர்களை இழுக்கின்றன.     



 


ஆனால், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் அரசியல் மூலம் தான் சமூக அடையாளங்கள் முழுமையடைந்தது. உதாரணமாக, வாக்குரிமை பெற்ற பின்பு தான் ஒபிசி, எஸ்சி, எஸ்டி போன்ற இடஒதுக்கீடு (அரசியல்) பிரிவுகள் உருவாகத் தொடங்கின. ஒரு குறிப்பிட்ட சிந்தாந்தத்தின் பிம்பமாகத் தான் தலைவர்கள் உருவகப்படுத்தப் படுகின்றனர். எனவே, அமெரிக்காவில் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி போன்ற அரசியல் ஆளுமைகளை, தமிழ்நாட்டில் பில் கிளிண்டன் போன்ற எதார்த்த அரசியல் தலைவர்கள் உருவாக முடியாது. 


நலத்திட்ட உதவிகள், இலவசங்கள் வாக்காளர்களை இழுக்கும் என்றால், 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று இருக்க வேண்டும்.(இலவச கலர் டிவி, ஒரு ரூபாய் அரசி, 5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள்). மகாத்மா ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், கிராமங்களில் இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வந்த காங்கிரஸ் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்தது. 55 லட்சம் குடும்பங்களுக்கு  ஓய்வூதியம் திட்டம் கொண்டு வந்த சமாஜ்வாதி கட்சி 2017 உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியடைந்தது.  


திமுக கட்சியின் தலைவர்,முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர் என்பதைத் தாண்டி அரசியல் சொல்லாடலை தன்னிச்சையான இயங்க வைக்கும் தலைவராக மு.க ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். தனது, அரசியல் சொல்லாடலுக்குள்  மாற்றுக் கட்சி உறுப்பினர்களையும் கொண்டு வந்துள்ளார். 



இடஒதுக்கீடு -சமூகநீதி சொல்லாடலை கலைஞர் கருணாநிதி வலிமையாக முன்னெடுத்தார். பின்னர், வந்த எம்.ஜி.ஆர்    இடஒதுக்கீடு 50 சதவீதமாகவும் உயர்த்தினார். பின்னர் வந்த, ஜெயலலிதா இதனை 69% ஆக உயர்த்தி சட்டப்பாதுகாப்பை வழங்கினார். அதேபோன்று, எம்ஜிஆர் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை கருணாநிதி,ஜெயலலிதா ஆகியோர் விரிவுபடுத்தினர். அதே வகையில், வரும் காலங்களில் 'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை அதிமுக மேலும் விரிவுபடுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த சொல்லாடலை விட்டு அதனால் வெளியே வர முடியாது என்பதை தான் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.