எந்த பதவி கொடுத்தாலும் இளைஞர் நலன் துறையை மறக்கமாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


45 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக இளைஞர் அணியினர் விழாவில் அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "திமுகவின் முதல் அணி என்பது இளைஞர் அணி தான். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தமிழக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். திமுக இளைஞர் அணியினர் சமூக வலைதளங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். பாஜகவினர் பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி ஆறுமுறை தமிழ்நாடு வந்தபோதும் பாஜகவுக்கு ஏமாற்றம் தான். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி.  பிரதமர் மோடி ஆயிரம் முறை தமிழ்நாடு வந்தாலும் பாஜகவால் காலூன்ற முடியாது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். 


பத்திரிகைகளில் சில கிசுகிசுக்கள், வதந்திகள் குறித்து படித்தேன். அதை நம்பி இப்போதே சிலர் துண்டு போட்டு வைக்கின்றனர். நான் பல முறை சொல்லிவிட்டேன். ஏற்கெனவே தலைவர் இதுபற்றி கூறியுள்ளார். அவர் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். எந்த பதவி வந்தாலும் இளைஞர்நலன் அணிதான் மனதுக்கு நெருக்கமானது. அதேபோல்தான் எனக்கும். எந்த பதவி கொடுத்தாலும் சிறப்பாக செய்ல்படுவேன். நான் துணை முதல்வர் என வரும் தகவல் வதந்தி. எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமான பொறுப்பு என்பது திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு மட்டும்தான்" என்றார்.