Microsoft Window: மைக்ரோசாஃப்ட் கோளாறு காரணமாக இரண்டாவது நாளாக, இன்றும் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் விமான சேவை பாதிப்பு:


மைக்ரோசாஃப்ட் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று, 16 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், டெல்லி, மும்பை மற்றும் மதுரை செல்ல வேண்டிய,  30-க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை ஒரே சீராக கிடைக்காமல், விட்டு விட்டு வருவதாக விமான நிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் , மைக்ரோசாஃப்ட் கோளாறால் 3 ஆயிரத்து 500 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுபோக மைக்ரோசாஃப்ட் சேவையை பெரும்பாலும் நம்பியிருந்த, ஐடி துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மருத்துவம் மற்றும் வணிகம் போன்ற சேவைகளும் முடங்கியுள்ளது. 


கிளவுடில் ஏற்பட்ட பிரச்னை:


சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில், மைக்ரோசாஃப்டின் கிளவுட் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. இந்த சூழலில் கிளவுட் மென்பொருள் பாதிக்கப்பட்டது  உலகின் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


குறிப்பாக, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கிளவுட் மென்பொருள் சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. போர்டிங் பாஸ் வழங்குவதில் கிளவுட் மென்பொருள் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால், பல விமானங்களின் சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பயணிகளின் நலன் கருதி கைகளில் போர்டிங் பாஸ் எழுதி தரப்பட்டது.


16 லட்சம் கோடி ரூபாய் இழப்பு?


மைக்ரோசாஃப்ட் கோளாறு தொடர்பாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாடெல்ல வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், :CrowdStrike ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது.  இது உலகளவில் IT அமைப்புகளை பாதிக்கத் தொடங்கியது. இந்தச் சிக்கலை நாங்கள் அறிந்திருக்கிறோம், மேலும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கணினிகளை பாதுகாப்பாக மீண்டும் ஆன்லைனிற்கு கொண்டு வருவதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க CrowdStrike மற்றும் தொழில்துறை முழுவதும் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் சேவை பாதிப்பால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு, சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதனிடையே, பிரச்னை சரிசெய்யப்பட்டு விட்டதாக கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனம் தெரிவித்தாலுமே, நிலைமை இன்னும் முழுமையாக பழைய நிலைக்கு வரவில்லை என்பதே உண்மையாக உள்ளது.