இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 0.7% பங்கு வகிப்பதாக விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற மத்திய பாதுக்காப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 780 மாணவர்களுக்கு முனைவர் மற்றும் பட்ட மேற்படிப்புக்கான துறைகளில் பட்டமளிக்கப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவியருக்கு 38 ன தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக விஞ்ஞானியும் மத்திய பாதுக்காப்புதுறை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி கலந்துகொண்டார். அவருடன் ராமசந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வெங்கடாசலம் இணைவேந்தர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய செல்வமூர்த்தி, "இந்தியா எதிர்காலத்தில் சூப்பர் பவர் கொண்ட நாடாக மாறப்போகிறது. இந்தியாவின் மக்கள் தொகையான 140 கோடி பேரில் 60% இளைஞர்கள் தான். அவர்கள் தான் இந்த மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். உலக அளவில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இவையெல்லாம் நல்ல அறிகுறிகள். நம் நாட்டின் இளைஞர்கள் எதிர்கால தலைவர்கள் மட்டுமல்ல அடுத்த 30 ஆண்டுகளுக்கு உலகளாவிய மனித வளத்தில் முக்கிய பங்காற்றப் போகிறவர்கள். திறன்பட்ட பணியாளர்களுக்கும் புதியனவற்றை உருவாக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கும் உலகளவில் அதிகமான தேவை உள்ளது. இந்த வெற்றிடத்தை இந்தியாவால் நிறைவு செய்ய முடியும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி சதவீதத்தில் தகவல் தொழில்நுட்ப 0.7 சதவீதம் பங்கு வகிக்கிறது” என அவர் தெரிவித்தார்.