டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீடு அமைந்துள்ள பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்தததாக தகவல் பரவிய நிலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலையில் ட்ரோன் பறந்ததாக எழுந்த தகவலின் அடிப்படையில் டெல்லி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 


அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பிரதமர் வீட்டின் மேல் பகுதியில் ட்ரோன் பறப்பதாக பாதுகாப்பு படையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை விசாரணையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  


கிடைத்த தகவலின்படி, இன்று (ஜூலை 3) அதிகாலை 5 மணியளவில், பிரதமர் மாளிகைக்கு மேலே ஏதோ பறப்பதைப் பார்த்து ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. 


இதையடுத்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றும், பறந்ததாக தெரியவில்லை என்றும் தகவல் தெரிவித்தனர். 






அறிக்கை வெளியிட்ட டெல்லி காவல்துறை:


விசாரணையின்போது, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக டெல்லி காவல்துறை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “"புது தில்லி மாவட்டத்தின் (NDD) கட்டுப்பாட்டு அறைக்கு, பிரதமர் இல்லம் அருகே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது. சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான சோதனை நடத்தப்பட்டது, ஆனால் அத்தகைய பொருள் எதுவும் பறக்கவில்லை" என்று தெரிவித்திருந்தது.