புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது. 


ராகுல் காந்திதான் இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்,  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023'(ABP Southern Rising Summit 2023 ) என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 


எனது குடும்பம் ஏற்கவில்லை:


பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஜோதிமணி அரசியலில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பேசினார்.  அவர் தனது உரையில்,” நான் மிக இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து விட்டேன். நான் அரசியலுக்கு வந்த போது எந்த கட்சியையும் நான் சார்ந்திருக்கவில்லை. எங்களது கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தலில் நான் போட்டியிட்டபோது எனது குடும்பம் அதனை ஏற்க மறுத்தது. குறிப்பாக எனது தாயார் வலிமையாக எதிர்த்தார்.  ஆனால் நான் மகாத்மா காந்தியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ராகுல் காந்தியைச் சந்தித்த பின்னர்தான் காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வருகின்றேன். எனது கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பலர் வேலையின்மையால் உள்ளனர். இந்தியாவில் வேலையின்மையும் கல்வியின்மையும் இன்றுவரை உள்ளது. 


ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கும். அவர் எடுக்கும் முடிவுகளில் பின்வாங்க மாட்டோம். கட்சிகளில் அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரை பொறுப்புகளில் ஆண்களே உள்ளனர். பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்த நிலை அனைத்து கட்சிகளிலும் மாற வேண்டும். 


ராகுல் காந்தி தலைமையில் நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் வேலை செய்கின்றோம். இது எங்களுக்கு  பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் கொள்கையை புரிந்துகொள்ள உதவுகின்றது. I.N.D.I.A கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என கருதுகின்றனர். இந்தியாவில் தற்போது ராகுல் காந்திதான் மிகப்பெரிய தலைவராக உள்ளார் என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி” கூறினார்.