புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னையில் இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேது நடைபெற்று வருகிறது.
குஷ்புவின்(Khushbu) ’பளார்’ சம்பவங்கள்
இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும், விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023'(ABP Southern Rising Summit 2023) என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பாக நடந்து வரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு(kushboo) பேசியதாவது, “ நான் எனது இளம் வயதில் இருந்தே மிகவும் வலிமையான மற்றும் உறுதியான பெண். எனது முடிவுகளை பெருமளவு நானே எடுப்பேன். எனக்கு எது சரி மற்றும் தவறு எனத் தெரியும். எதற்கு நான் தலையசைக்க வேண்டும், எதற்கு நான் இடம் கொடுக்கக் கூடாது என்பது குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். என்னிடத்தில் எல்லை மீறியவர்களுக்கு நான் தக்க பதில் அடி கொடுத்திருக்கிறேன். நான் சென்னைக்கு எனது குடும்பத்துடன் குடியேறிய கால கட்டம் அது. நான் எனது அம்மா மற்றும் உறவினருடன் நடந்து சென்று கொண்டு இருந்தேன்.
அப்போது ஒருவர் எனது தாய் மற்றும் உறவினரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவரை துரத்திப் பிடித்து மூக்கை உடைத்தேன். அதேபோல் பெங்களூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார். உடனே அவரை கன்னத்தில் அறைந்தேன். நான் எப்போதும் என்னிடம் யாரையும் எல்லை மீற அனுமதிக்க மாட்டேன். நான் பெங்களூருக்குச் சென்றது அரசியல் பிரச்சாரத்திற்குத்தான். அதேபோல், சினிமாவிற்கு வந்தது நடிக்கத்தான். அதேபோல் நடிகர்களில் மிகவும் பிடித்த நடிகர்கள் என்றால் அமிதாப் பச்சன், கமல் ஹாசன் மற்றும் கார்த்திக் மிகவும் பிடிக்கும்” எனக் கூறினார்.