Edappadi Palanisamy: ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை திசை திருப்ப சனாதானத்தை கையில் எடுத்துள்ளது திமுக என்று எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.


"சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது"


கோவை மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. விலைவாசி, மின் கட்டணம் உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இப்பிரச்சனைகளை திசை திருப்ப சனாதனம் குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளனர். பட்டியிலன சமூகத்தைச் சேர்ந்த தனபால் சட்டப்பேரவை தலைவராக இருக்கும்போது சட்டமன்ற கூட்டத்தில் அந்த நிகழ்விலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதல்வர் சட்டப்பேரவை மேஜையை உடைத்து, மைக்கை உடைத்து சட்டையை கிழித்துத் தூக்கி எறிந்த காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் வெளிவந்தது.


மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த திமுக சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.  அதிமுக மதம் சாதி அப்பாற்பட்ட கட்சி. பட்டியலின மக்களுக்கு துரோகம் அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள். ஊழலை மறைப்பதற்கு விலைவாசி உயர்ஙை மறைப்பதற்கு இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரங்கேற்று இருக்கிறது. உதயநிதி அதிமுக பற்றி பேச வயது போதாது. உதயநிதி என்ன சாதனை செய்துள்ளார்? உதயநிதி கருணாநிதி பேரன். ஸ்டாலின் மகன் என்பதை தவிர அவருக்கு வேறு தகுதியில்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது” என்றார்.


”தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்"


தொடர்ந்து பேசிய அவர், ”வாரிசு அரசியில் செய்யும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.  ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.2.75 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர்.  இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் முதலமைச்சர் எதற்காக அச்சப்படுகிறார். தேர்தல் சந்திக்க வேண்டியது தானே. தேர்தலை சந்திக்க முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்? ஏன் மக்களை சந்திக்க பயப்படுகிறார்? திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் இல்லை. எந்த சாதனையும் செய்யவில்லை. சீமான் என்ன பேசுகிறார் என எங்களுக்கு புரியவில்லை. திமுகவை எதிரி என்றவர், நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பேன் என்று சீமான் கூறுவது வேடிக்கையாக உள்ளது” என்றார் எடப்பாடி பழனிசாமி.




மேலும் படிக்க 


India Bharat Row: "அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" பாரதம் பெயர் மாற்ற விவகாரத்தில் வெளுத்து வாங்கிய முதலமைச்சர்  


Sanatanam Row: உதயநிதி கருத்துக்கு ஆதரவளிக்கும் திமுக - காங்கிரஸ்: மம்தாவின் பதிலால் I.N.D.I.A கூட்டணியில் சலசலப்பு?