கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணனின் மகன் கோபாலகிருஷ்ணன் மறைவிற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்திற்குள் உள்ளே செல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. விலைவாசி, மின் கட்டணம் உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களை திசை திருப்ப சனாதனம் குறித்து பேசி நாடகம் செய்து வருகின்றனர். ராம்நாத் கோவிந்த், திரெளபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, திமுகவினர் எதிர்த்து வாக்களித்தனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனபால் சட்டப்பேரவை தலைவராக இருந்த போது திமுகவினர் அவரை இழிவுபடுத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்த திமுக, சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அதிமுக மதம், சாதிக்கு அப்பாற்பட்ட கட்சி. உதயநிதி ஸ்டாலின் பேசும் தன்னை முன்னிலைப்படுத்த சனாதனத்தை பேசு பொருளாக்கி செய்த துரோக செயலை திசை திருப்ப பார்க்கிறார். தமிழகம் குட்டிச்சுவராக உள்ளது. நேற்று மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. ஊழலை மறைக்க திமுக நாடகமாடுகிறது. இந்தியாவை பாரத் என பெயர் மாற்றுவது குறித்து பார்த்த பின் கருத்து சொல்கிறேன். அதிமுக பற்றி பேச உதயநிதிக்கு வயது போதாது. உதயநிதி என்ன சாதனை செய்துள்ளார்? கருணாநிதி பேரன். ஸ்டாலின் மகன் என்பதை தவிர உதயநிதிக்கு வேறு தகுதியில்லை. தமிழகத்தை ஆட்டி படைக்கப் பார்க்கிறார்கள். இது மன்னராட்சி கிடையாது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம். திமுகவில் குடும்பத்தை தவிர வேறு யாரும் வர முடியாது.
குடும்ப ஆட்சி நடக்கிறது. திமுக கட்சி அல்ல. கார்பரேட் கம்பெனி. நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு அரசியல் காலம் முடிவு கட்டப்படும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. எமர்ஜென்சியை கொண்டு வந்த போது எதிர்த்த திமுக, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. அதுபோல சூழலுக்கு ஏற்ப தான் முடிவு செய்ய முடியும். தேர்தலை சந்திக்க முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்? சூப்பர் முதலமைச்சர் என்பவர் தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? ஏன் மக்களை சந்திக்க பயப்படுகிறார்? திமுக ஆட்சியில் புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. எந்த சாதனையும் செய்யவில்லை. ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக உள்ளார். சீமான் என்ன பேசுகிறார் என எங்களுக்கு புரியவில்லை. திமுகவை எதிரி என்றவர், தேர்தலில் ஆதரவு அளிப்பேன் என்பது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.