கரூர் மாவட்டம் ,தளவாபாளையம் அருகே உள்ள என்.புதூர் அருகே பட்டறை பகுதியை சேர்ந்த சக்திவேல் இவரது மனைவி ராணி இருவரும் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் இவர்களுக்கு சுஜித் என்ற 10 வயது மகன் என்.புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சக்திவேலும், ராணியும் வேலைக்கு செல்வதாக சுஜித்தை சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி கோவிந்தன் என்பவரது மனைவி சித்ரா வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது சித்ரா வீட்டில் சக்திவேல் அத்தை சரோஜாவும் இருந்துள்ளார்.
சித்ராவின் மகன் தங்கதுரை (10) அரவக்குறிச்சி, கோவிலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் சுஜித்தும், தங்கதுரையும் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தனர். சக்திவேலின் அத்தை சரோஜா இரண்டு சிறுவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் சிறிது நேரத்தில் தூங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாலை மூன்று முப்பது மணி அளவில் சரோஜா சக்திவேலுக்கு போன் செய்து விளையாடிக் கொண்டிருந்த சுஜித்தையும், தங்கதுரையையும் வெகுநேரமாகக் காணவில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் பதட்டம் அடைந்த சக்திவேல், ராணி தம்பதியர் மற்றும் சித்ரா ஆகியோர் சுஜித் மற்றும் தங்கதுரையை அப்பகுதியில் உள்ள உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து அருகிலுள்ள வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், நேற்று காலை என்.புதூர் 4 ரோடு பகுதியில் 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தங்கத்துரை மற்றும் சுஜித் மூழ்கி இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 20 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு கிணற்று மேட்டு பகுதிக்கு கொண்டு வந்தனர்.
தங்கத்துரை மற்றும் சுஜித் உடலை பார்த்தவுடன் சிறுவனின் பெற்றோர்கள் கதறிய சம்பவம் அப்பகுதி மக்களைக் கண்கலங்கச் செய்தது. பின்னர் வாங்கல் போலீசார் இரு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானாகவே நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து இருப்பார்களா அல்லது மீன்பிடிக்கச் சென்றார்களா அல்லது வேறு யாருக்காவது இந்த மரணத்தில் தொடர்பு உண்டா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். கிணற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.